அரசு ஊழியர்கள் பலரும் பல்வேறு கடனுதவி திட்டங்களில் தானியங்கி முறையில் மாதத் தவணையை பிடித்தம் செய்து கொள்ளும் முறையை பயன்படுத்துவதால் அதிர்ச்சி அடைந்தனர்.
கோவை: அக்டோபர் மாதத்திற்கான ஊதியம் வங்கி கணக்கில் செலுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டதால் கோவை மாவட்ட அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அரசு ஊழியர்கள் கூறியதாவது,
கோவை மாவட்டத்தில் காவல்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாதம்தோறும் கடைசி வேலை நாளில் ஊதியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
மாதத்தின் கடைசி நாள் பொதுவிடுமுறை அல்லது ஞாயிற்றுக்கிழமை என வரும் பட்சத்தில் மாதத்தின் கடைசி நாளுக்கு முந்தைய நாளே வங்கிக்கணக்கில் ஊதியம் செலுத்தப்படும்.
இதனிடையே, அக்டோபர் மாதத்திற்கான ஊதியம் செப்டம்பர் 30-ம் தேதி வங்கிகளில் கணக்குகள் நிறைவடையும் நாள்(Account Closing Day) என்ற காரணத்தால் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும் மறுதினம் தொழில் நுட்பக்கோளாறு எனவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை வரை ஊதியம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படவில்லை. இதனால் அரசு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு காணப்பட்டது. ஒருவருக்கொருவர் மற்ற துறைகளில் நண்பர்களிடம் ஊதியம் செலுத்தப்பட்டதா என்று கேட்டபடி இருந்தனர். இதையடுத்து, தாமதமாக நேற்று முன்தினம் மாலை ஊதியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதை அடுத்து ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர்.
அரசு ஊழியர்கள் பலரும் பல்வேறு கடனுதவி திட்டங்களில் தானியங்கி முறையில் மாதத் தவணையை பிடித்தம் செய்து கொள்ளும் முறையை பயன்படுத்துகின்றனர். குறித்த தேதியில் வங்கிக்கணக்கில் பணம் இல்லாவிட்டால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். இதுவே ஊதியம் பெறுவதற்கு ஏற்பட்ட கால தாமதத்தால் அரசு ஊழியர்கள் பலரும் அதிர்ச்சி அடைய காரணம்.
இவ்வாறு அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.