வனத்துறை மேம்பாட்டிற்கான நிதியை முந்தைய அதிமுக அரசு பெறாததன் விளைவாக பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே தற்போது மத்திய அரசிடம் ரூபாய் 2 ஆயிரம் கோடி நிதியைக்கேட்டுள்ளதாக தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கோவையில் தெரிவித்துள்ளார்.
கோவை: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட தொழில் மையம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட சமூக நல அலுவலகம், வேளாண் துறை, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட 5 துறைகளின் கீழ் 21 பயனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கொரோனா தொற்றின் தாக்கம் அதிவேமாக இருந்த நிலையில் தான் திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்றது.
இருந்தப்போதும் தமிழக அரசு, மருத்துவமனைகளுக்குத் தேவையான படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகள் போன்றவை வழங்க துரிதநடவடிக்கை எடுத்ததன் விளைவு தான் தற்போது தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அனைத்துத் துறைகளிலுமே சிறப்பாகப் பணியாற்றி வரும் நிலையில், மருத்துவத்துறையில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தினைச் செயல்படுத்தினார். தற்போது இதன் மூலம் பல லட்சம் நோயாளிகள் பயனடைந்துள்ளதாக தெரிவித்தார். இதோடு முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி கொண்டு வந்த வருமுன் காப்போம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்ததோடு, ஏறக்குறைய 1500 முகாம்கள் நடத்தி எல்லாப் பகுதிகளிலுமே ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நடத்திவருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாக அனைத்துப் பாதுகாப்பான முன்னேற்பாடுகளும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்த அமைச்சர், வனத்துறையில் உள்ள வேட்டைத தடுப்பு காவலர்களுக்கான நிரந்தர நியமன பணி ஆணை வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இதற்கான நிதியை வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், கடந்த அதிமுக ஆட்சியில் ஒன்றிய அரசின் நிதியை பெறாமல் விட்டு விட்டதாகவும் தற்போது திமுக தலைமையிலான அரசு ஒன்றிய அரசிடம் பசுமை திட்டம் மூலம் 2 ஆயிரம் கோடி நிதி வழங்கிட கேட்டுள்ளதாகவும் அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்தார்.