கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சிரமத்தைப் போக்க ஜெராக்ஸ் மெஷின் 'சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர்' அமைப்பு சார்பில் வழங்கப்படுவதுடன் அதை இயக்கவும், பராமரிக்கவும் உதவி செய்யப்படும்.
கோவை: கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சிரமத்தைப் போக்க ஜெராக்ஸ் மெஷின் 'சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர்' அமைப்பு சார்பில் வழங்கப்படுவதுடன் அதை இயக்கவும் பராமரிக்கவும் உதவி செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் ஜெராக்ஸ் மற்றும் போட்டோ எடுக்க முடியாமல் தவிப்பது குறித்தும் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் அருகே வசதி ஏற்படுத்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சிம்பிளிசிட்டி ஆன்லைன் செய்தி ஊடகத்தில் நேற்று புகைப்படங்களுடன் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர்(CVC)என்ற நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர். சி.எம்.ஜெயராமன் கூறுகையில்,
"மாவட்டம் முழுவதும் உள்ள மக்களின் குறை தீர்க்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலகத்தில் ஜெராக்ஸ் மற்றும் போட்டோ எடுக்கும் வசதி இல்லாமல் மாற்றுத்திறனாளிகள் சிரமப்படுவது குறித்து சிம்பிளிசிட்டி ஆன்லைன் ஊடகத்தில் நேற்று வெளியான செய்தி மூலம் தெரியவந்தது.
எங்கள் அமைப்பு சார்பில் உடனடியாக கோனிகா(Konica) ஜெராக்ஸ் மெஷின் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி நல அலுவலகத்திற்கு வழங்க தயாராக உள்ளது.
இது மட்டுமன்றி அந்த மெஷினை இயக்க ஒரு நபரை பணிக்கு நியமிக்கவும், அந்த மெஷின் பழுதானால் அதை சரி செய்ய ஆகும் செலவை எங்கள் அமைப்பு சார்பில் ஏற்றுக்கொள்ளவும் தயாராக உள்ளோம்.
இதுகுறித்து நாளை ஆட்சியர் சமீரன் அவர்களை நேரில் சந்தித்து மெஷினை வழங்க முடிவு செய்துள்ளோம். சமூக அக்கறையுடன் இந்த செய்தியை வெளியிட்ட சிம்பிளிசிட்டி ஆன்லைன் நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.