பீமா கோரேகான் வன்முறையில் ஈடுபட்டதாக பொய்யான வழக்கில் கைதாகி சிறையில் உள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோவையில் நடைபெற்ற மனித சங்கிலிப் போராட்டத்தில் அரசியல் கட்சியினர் வலியுறத்தினர்.
கோவை: கிழக்கிந்திய கம்பெனி மற்றும் மராட்டியர்களுக்கு இடையிலான போரின் 200 ஆண்டு நினைவு நிகழ்ச்சி பீமா கொரேகானில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போது வன்முறை சம்பவம் அரங்கேறியது. இச்சம்பவம் நாடு முழுவதும் சமூக மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் வன்முறை சம்பவத்திற்குத் தொடர்பில்லாத பலரை போலீசார் கைது செய்துள்ளனர். எனவே 3 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி கோவை காந்திபுரம் பகுதியில் என தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் இன்று மாலை மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இந்த மனித சங்கிலி போராட்டத்தில் சி.பி.எம், சிபி.ஐ, தபெதிக, ஆதிதமிழர் பேரவை, தமிழ்புலிகள், எஸ்.டி.பி.ஐ, விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு அமைப்பினை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில் தமிழகம் முழுவதும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தை நீக்க கோரியும், பீமா கோரெகான் வழக்கில் பொய்யாக கைது செய்யப்பட்டவர் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும் பீமா கோரேகான் பகுதியில் அஞ்சலி செலுத்த ஏராளமானவர்கள் வருகின்ற நிலையில் அதை தடுக்கவே இதுப்போன்ற கைது நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.