கோவை: இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு காந்திபுரம் இந்து முன்னணி மாவட்ட தலைமை அலுவலகம் நடைபெற்றது.
கோவை: இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு காந்திபுரம் இந்து முன்னணி மாவட்ட தலைமை அலுவலகம் நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி விழா நடத்திடத் தமிழக அரசு தக்க உதவிகளைச் செய்து விழா சிறக்க ஆவன செய்ய வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் தெய்வபக்தியையும் தேசபக்தியையும் பரப்பும் விதமாக விநாயகர் சதுர்த்தி விழாவை வீதியெங்கும் கொண்டாட வீரத்துறவி இராம.கோபாலன் மேற்கொண்ட முயற்சியின் பலனாக விநாயகர் சதுர்த்தி விழாவானது வெகுஜன இயக்கமாக மாறி கடந்த 40-ஆண்டு காலமாக இந்து முன்னணி பேரியக்கத்தின் சார்பில் பல்வேறு தடைகளைக் கடந்து கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும், சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகளைப் புறம் தள்ளி அனைத்து சமுதாய மக்களும் ஒன்றுபட்டு பொதுவெளியில் ஒற்றுமையாக ஊர்வலமாகச் செல்வதற்கு விநாயகர் சதுர்த்தி விழா முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவின்போது அன்னதான சேவைகள், மாணவ, மாணவிகளின் திறன் வளர்க்கும் விளையாட்டுப் போட்டிகள், கலாச்சார நிகழ்ச்சிகள், பல்வேறு தொண்டு காரியங்கள் போன்றவைகள் செய்து தமிழகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு உலகை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்றுநோய் காரணமாக விழாவை மிகவும் எளிமையாகக் கொண்ட முடிவு செய்து ஊர்வலம் இல்லாமல் விழா நடைபெற்றது. இதனால் விநாயகர் சதுர்த்தியைச் சார்ந்து வருவாய் ஈட்டும் தொழிலாளர்கள் வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடிவருகின்றனர்.
தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகின்றது என்ற காரணத்தினால் அரசானது வர்த்தக நிறுவனங்கள், திரையரங்குகள், பொழுதுபோக்கு கூடங்கள், பூங்காக்கள், வழக்கம் போல இயங்க அனுமதித்துள்ளது.
மேலும் பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசிகளைப் போட்டுள்ளார்கள். அதனால் இந்த ஆண்டு சமூக இடைவெளியோடு, கொரோனா விதிகளை கடைப்பிடித்து விநாயகர் சதுர்த்தி திருவிழாவை நடத்துவது என இந்தமுன்னணி இயக்கம் முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 25-ஆயிரம் இடங்களில் விநாயகர் வைத்து வழிபாடு செய்ய இந்தமுன்னணி சார்பாகத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு நாள் முதல் ஒன்பது நாள் வரை அந்தந்த ஊர்களில் வழக்கம்போல விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும்.
விசர்ஜன ஊர்வலமும் நடைபெறும். இந்த ஆண்டு தமிழகத்திலுள்ள கோவில்களைக் காத்திடவே இந்துக்கள் ஒன்றிணைவோம் முழக்கத்துடன் விழா நடைபெறவிருக்கிறது. தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழா நடத்திடத் தக்க உதவிகளைச் செய்து விழா சிறக்க ஆவன செய்ய வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். உடன் மாநிலச் செயலாளர் J.S.கிஷோர் குமார் மாவட்ட தலைவர் k.தசரதன் மாவட்டச் செயலாளர்C.தனபால் ஆகியோர் உடன் இருந்தனர்.