கோவை காந்திபுரம் சிக்னலில் ஒரு காலை இழந்த ஒரு நபர், பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவரை உன்னிப்பாக கவனித்த போது,. கழுத்தில் மற்றும் முதுகில் அவர் எதோ வாசகங்கள் அடங்கிய அட்டையை தொங்கவிட்டு இருந்தார்.
கோவை: கோவை காந்திபுரம் சிக்னலில் ஒரு காலை இழந்த ஒரு நபர், பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவரை உன்னிப்பாக கவனித்த போது,.கழுத்தில் மற்றும் முதுகில் அவர் எதோ வாசகங்கள் அடங்கிய அட்டையை தொங்கவிட்டு இருந்தார்.
எனக்கு உதவி செய்யுங்கள் என்ற வாசகம் தான் எழுதப்பட்டிருக்கும் என்று நினைத்தபடி, அருகில் சென்று பார்த்தபோது தான் தெரிந்தது அவரது மனிதநேயம். அப்படி என்ன எழுதியிருந்தார்..? மக்களே, கவனக்குறைவாக இருக்காதீர்கள், மாஸ்க் போடுங்க, ஹெல்மெட் போடுங்க என்ற விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
ஒவ்வொரு நாளும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அரசு சார்பாக பல்வேறு கொரோனா தடுப்புநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், மக்களின் கவனக்குறைவுக்கு அளவே இல்லை என்பதே நிதர்சனம். கொரோனா பரவலை கட்டுப்படுத்த, அரசும் மக்களும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், தன் ஊனத்தையும் பொருட்படுத்தாமல் கோவை காந்திபுரம் சிக்னலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த அந்த
நபரிடம் பேசினோம்....
சார், என்னுடைய பெயர் சபாபதி வயது 47, சமையல் மாஸ்டர். எனது சொந்த ஊர் சிவகாசி, விருதுநகர் மாவட்டம்.எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். என்னுடைய மனைவி கூலி வேலை செய்து வருகிறார். நான் கடந்த 10- வருடங்களாக திருப்பூரில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தேன்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, என்னுடைய ஒரு காலில் அதிக வலி ஏற்பட்டது என்று டாக்டரை சந்தித்தேன். என்னை பரிசோதித்த மருத்துவர், கால் ஜவ்வு விலகி இருப்பதாக கூறி சிகிச்சை அளித்தார். ஒரு சில நாட்களிலேயே, இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு என்னுடைய ஒரு கால்முழுதும் கறுத்து விட்டது. வேறு வழியில்லை, பாதிக்கபட்ட காலை அகற்ற வேண்டும் என்று மருத்துவர் சொல்லவே,திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் என்னுடைய கால் அகற்றப்பட்டது.
ஒரு கால் இழந்த பின், சமையல் வேலை செய்ய முடியாத சூழல்.குடும்பத்தை காப்பாற்ற வேறு வழி தெரியவில்லை, மறுபுறம், கொரோனா நோய் தொற்றால் வேலை வாய்ப்பும் இல்லாத நிலை. வேறு, வழி தெரியவில்லை அதனால் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறேன்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக, கொரோனா என்ற பெருந்தொற்றுமக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கி விட்டது. அதனால், என்னால் முடிந்த உதவியாக அரசினுடைய விழிப்புணர்வு வாசகங்களை எழுதி என் மார்பிலும், முதுகிலும் தொங்கவிட்டு, மக்களிடையே சிக்னல் மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.
முக கவசம் அணிவது அவசியம், கைகளை அடிக்கடி சோப் கொண்டு கழுவிக் கொள்ளுங்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள், ஹெல்மெட் கண்டிப்பாக அணியவும், 24 மணி நேரமும் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது உடனே சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்ற விழிப்புணர்வு செய்திகள் என் மூலம் மக்களிடம் சென்றடைய என்னால் இயன்ற சிறிய பங்களிப்பே இந்த முயற்சி, என்றார் சபாபதி.
"வாழ்க்கையில் முன்னேற துடித்தால் பயன் கிடைக்கும்...! ஆனால், சாலையில் முன்னேற துடித்தால், ஃபைன் தான் கிடைக்கும்..! என்ற வாசகங்களை எழுதி மக்களுக்கு, சாலை விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறேன்.
கடந்த அதிமுக ஆட்சியில், பலமுறை அரசுக்கு மனுக்கள் அளித்துள்ளேன். என் வாழ்வாதாரத்திற்கு, ஏதாவது ஒரு மூன்று சக்கர வாகனம் அல்லது தள்ளுவண்டி கொடுத்தால் நான் வடை, டீ, மோர் என விற்பனை செய்து பிழைத்துக் கொள்வேன். ஆனால், அரசிடம் இருந்து மௌனமே பதிலாய் வந்தது.
எனவே, இப்போது புதிதாய் பொறுப்பு ஏற்றுள்ள திமுக அரசுக்கும் இந்த செய்தி மூலமாக நான் கோரிக்கை வைக்கிறேன். எனக்கு மூன்று சக்கர வாகனம் அல்லது தள்ளுவண்டி இலவசமாக வழங்கி, வியாபாரம் செய்ய அரசு உதவி செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், என்றார் சபாபதி.
ஊனத்தை ஒரு தடையாக நினைக்காமல் சாதித்த எத்தனையோ பேர் மத்தியில், சாபதிக்கும் ஒரு இடம் உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. ஒரு கால் இல்லாமல், தான் படும்பாடு பிறருக்கு வரக்கூடாது என்ற தன்னலமற்ற நோக்கத்தில், வாகன ஓட்டிகளிடம், ஹெல்மெட் மற்றும் வாகனத்தை அளவான வேகத்தில் இயக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி பிச்சை எடுத்து வருகிறார்.
வாழ்வாதாரத்திற்க்காக பிச்சை எடுக்க வேண்டிய சூழலிலும், சமூகம் மீது கொண்டுள்ள அக்கறையினால், கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சபாபதியை பாராட்டி, இவரின் கோரிக்கையை அரசு கட்டாயம் நிறைவேற்றி கொடுக்கும் என்ற நம்பிக்கையில் விடைபெற்றோம்.