கோவை: குண்டும் குழியுமாக உள்ள கோவை ஹோப் காலேஜ்- சேரன்மாநகர் சாலையில், தற்பொழுது குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, ஏற்கனவே மோசமான நிலையில் உள்ள சாலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
கோவை: குண்டும் குழியுமாக உள்ள கோவை ஹோப் காலேஜ்- சேரன்மாநகர் சாலையில், தற்பொழுது கேஸ் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, ஏற்கனவே மோசமான நிலையில் உள்ள சாலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஒப்பிடுகையில், சேரன் மாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. அது தவிர, அவிநாசி ரோடு மற்றும் திருச்சி ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள், சத்தி ரோடு மற்றும் மேட்டுப்பாளையம் ரோடு சென்றடைய விளாங்குறிச்சி ரோடு பெரிிதும் உதவுகிறது. இதனால், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் இயக்கப்படுகின்றன.
பாதுகாப்பில்லாமல் இயக்கப்படும் கனரக வாகனங்கள்
குறிப்பாக, தண்ணீர்பந்தல் பகுதி அருகே செயல்பட்டு வரும் ஸ்டீல் கம்பெனி வளாகத்திலிருந்து ஸ்டீல் தகடுகள் உள்ளிட்ட அதிக எடைகொண்ட இரும்பு பொருட்களை ஏற்றி வரும் லாரிகள், சேரன்மாநகர் சாலை வழியாகத்தான் பெரும்பாலும் இயக்கப்படுகின்றன. இப்பகுதியில், அதிகமான லாரிகள் பல்வேறு விதமான பொருட்களை தொழிற்சாலைகளுக்கு கொண்டு சென்று வருகின்றன. இந்தநிலையில்,
இவ்வாறு இயக்கப்படும் பெரும்பாலான கனரக வாகனங்களில் டிரைவர் மட்டுமே உள்ளார். கிளீனர் மற்றும் உதவிக்கு யாரும் இல்லாத காரணத்தால், போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் சேரன்மாநகர் ரோட்டில் கனரக வாகனங்களை இயக்கும் பொழுது பல விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ஏற்கனவே, கேஸ் குழாய் பதிக்கும் பணிக்காக சாலை தோண்டப்பட்டு மிக மோசமான நிலையில் உள்ள சூழலில், வழக்கம்போல் ஸ்டீல் உள்ளிட்ட இரும்பு பொருட்களை ஏற்றிக் கொண்டு இயக்கப்படும் கனரக வாகனங்கள் சேரன்மாநகர் ரோட்டில் செல்லும் போது, இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் செல்லவேண்டிய சூழல் உள்ளது.
கரணம் தப்பினால் மரணம்

இன்று மதியம், பால்காரர் தோட்டம் பகுதி அருகே மெயின் ரோட்டில் அதிக டன் எடை கொண்ட இரும்பு தகடுகளை ஏற்றி சென்ற கனரக வாகனத்திலிருந்து இரும்பு தகடுகள் சாலையின் ஓரம் அமைக்கப்பட்டுள்ள இஸ்திரி கடையை கிழித்துக்கொண்டு ரோட்டில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை.

"இது போன்ற கனரக வாகனங்களை இயக்கும் போது, பொருட்கள் ரோட்டில் விழாமல் இருக்கும் வகையில் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை லாரி உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டும். தவிர குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ள ரோட்டில் இயக்கப்படும் லாரிகளில், கட்டாயம் கிளீனர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவற்றை போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இன்று நடந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறுகையில்: இன்று மதியம் பால்காரர்தோட்டம் அருகே நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்தேன்.

அப்போது, ஸ்டீல் தகடுகளை திறந்தவெளியில் ஏற்றிவந்த கனரக வாகனம் ஒன்று சாலை குண்டும் குழியுமாக இருந்த காரணத்தால் தடுமாறி செல்வதைக் கண்டேன். உடனடியாக, அபாயத்தை உணர்ந்து லாரிக்கு பின்னால் சென்ற வாகன ஓட்டிகளை எச்சரித்து தடுத்து நிறுத்தினேன். சில நிமிடங்களில், நான் எதிர்பார்த்தது போலவே லாரியில் இருந்து ஸ்டீல் தகடுகள் ரோட்டோரத்தில் இருந்த இஸ்திரி கடையை சேதப்படுத்தி ரோட்டில் விழுந்தன.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஸ்டீல் தகடுகள் லாரியின் வலது புறம் ரோட்டில் விழுந்திருந்தால், வாகன ஓட்டிகள் மீதுதான் விழுந்திருக்கும். குழி தோண்டப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் தப்பிக்க வாய்ப்பில்லை. இதனால் பெரிய அசம்பாவிதம் நடந்து இருக்கும், என்றார்.
இது குறித்து சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக, எம்எல்ஏ., ஜெயராம் கூறியதாவது: சேரன்மாநகர் செல்லும் விளாங்குறிச்சி ரோட்டில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் பதிப்பு பணிகளை நானே நேரில் ஆய்வு செய்து துரிதப்படுத்த நடவடிக்கை கொண்டுள்ளேன். இந்தப் பணிகள் முடிந்தவுடன் புதிதாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் நேரில் வலியுறுத்தி கோரிக்கை மனுவையும் அளித்துள்ளேன். இந்த சாலையில், இயக்கப்படும் கனரக வாகனங்கள் உரிய பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றி இயக்கினால் மட்டுமே இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க முடியும், என்றார்.