கோவை: கேரளாவில் பறவை காய்ச்சல் அதிகரித்து வருவதையடுத்து, தமிழக - கேரள எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை: கேரளாவில் பறவை காய்ச்சல் அதிகரித்து வருவதையடுத்து, தமிழக - கேரள எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, கேரளாவிற்கு அருகாமையில் கோவை உள்ளதால், இங்குள்ள மக்கள் கோழிக்கறி, முட்டை சாப்பிடலாமா? என்ற குழப்பத்தில் உள்ளனர். இது குறித்து நம்மிடம் பேசிய மருத்துவர் எந்த அச்சமும் வேண்டாம்., என்கிறார் கோவை வன உயிரியல் பூங்காவின் கால்நடை மருத்துவர் செந்தில்நாதன்.
இது குறித்து நம்மிடம் அவர் பேசுகையில்:
கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாகக் அடுத்தடுத்து கோழிப் பண்ணைகளில் 200-க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன. இதைத்தொடர்ந்து, அவைகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, போபால் மற்றும் புனேவில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டதில், இறந்த கோழிகளுக்குப் பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இதன் எதிரொலியாக, கோழிப் பண்ணைகளிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் மூட கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆதலால், தமிழக கேரள எல்லைப் பகுதியான வாளையார் சோதனைச் சாவடியில் சுகாதாரத்துறை, கால்நடை மருத்துவத் துறை, காவல்துறை, தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சல் மற்றும் சமீபத்தில் ஹரியானா மாநிலத்தில் இந்த நோய்க்கு 11 வயது சிறுவன் பலியானது, மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கோழி மற்றும் வாத்து இறைச்சியை உண்பது குறித்து பெரும் குழப்பம் மக்களிடையே நீடித்து வருகிறது.
பறவைகளின் எச்சம் மூலம் பரவும்
பறவை காய்ச்சல் என்பது ஒவ்வொரு மழைக் காலங்களிலும் பறவைகளுக்கு வரக்கூடிய நோய். 1997ஆம் ஆண்டு இந்த பறவை காய்ச்சல் சீனாவில் தோன்றியது. நோய் தொற்று ஏற்பட்ட பறவைகளை பராமரித்து வந்த நபர்களுக்குப் பறவை காய்ச்சல் தாக்கி, ஒரு சில உயிரிழப்புகளும் ஏற்பட்டது.
குறிப்பாக, ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெறக்கூடிய நீர்நிலைகளில் வாழக்கூடிய பறவைகளுக்கு, எச்சம் மூலமாக விரைவாகப் பரவுகிறது. இதனால், வாத்துகளை இந்த நோய் எளிதாக தாக்குகிறது. பிறகு, வாத்திலிருந்து கோழிகளுக்குப் பரவுகிறது.
மழைக்காலங்களில் தாக்கும் நோய்
இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழிகள் இறப்புக்கு உள்ளாகும். ஒவ்வொரு வருடமும் மழை மற்றும் குளிர் காலங்களில் தாக்கும் இந்த நோயால் தற்போது கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியில் அதிக அளவில் பரவி வருகிறது.
தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு; வாகனங்களுக்கு தடை
கேரளாவிலிருந்து வரக்கூடிய அனைத்து வாகனங்களும், தீவிர பரிசோதனைக்குப் பின்னரே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
கண்காணிப்பு பணியில், தமிழக கால்நடை மருத்துவத் துறை ,சுகாதாரத் துறை, காவல் துறை ஈடுபட்டு வருகிறது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிப்பு போன்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவை, பறவைக் காய்ச்சல் கட்டுக்குள் வரும் வரை தொடரும் எனத் தமிழக கால்நடைத் துறை அறிவித்துள்ளது.
குறிப்பாக, தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு மற்றும் கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு இறைச்சிகள் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கோழிப் பண்ணை உரிமையாளர்களுக்கு அறிவுரை
கேரளாவில் பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்ட உடனே, தமிழக கால்நடைத் துறை சார்பாக இங்குள்ள கோழிப் பண்ணை உரிமையாளர்களுக்கு, நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், கோழிப் பண்ணைகளில் கிருமி நாசினிகள் தெளிப்பது, கோழிகளுக்கு உடனே தடுப்பூசி செலுத்துவது என தடுப்புப் பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளன.
குறிப்பாக, கோவை, நாமக்கல், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகளும், 6 கோடி கோழிகள் வளர்க்கப்படுகிறது. சரியான நேரத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டதால், இதுவரை தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் அறிகுறி இல்லை.
கோழிக்கறி, முட்டை சாப்பிடலாமா?
எனவே, பொதுமக்கள் பறவை காய்ச்சல் குறித்து அச்சப்படத் தேவையில்லை. முக்கியமாக, பறவைக் காய்ச்சல் மனிதர்களைத் தாக்காது. பறவைக் காய்ச்சல் இருக்கும் போது, கோழி கறி மற்றும் முட்டை சாப்பிடக்கூடாது என்ற வதந்தி பரவி வருகிறது. கோழிக் கறி சாப்பிடுவது மூலம் மக்களுக்குப் பறவைக் காய்ச்சல் பரவாது. மக்கள் வழக்கம் போலச் சுகாதார நடவடிக்கைகளைக் கடைப்பிடித்தாலே போதும், என டாக்டர் செந்தில்நாதன் விளக்கமளித்துள்ளார்.