கோவை: குளங்கள், ஏரிகளில் கான்கிரீட் தளங்கள் அமைக்கப்படாது என திமுக சுற்றுச்சூழல் அணியின் ஆய்வைத் தொடர்ந்து நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார்.
கோவை: குளங்கள், ஏரிகளில் கான்கிரீட் தளங்கள் அமைக்கப்படாது என திமுக சுற்றுச்சூழல் அணியின் ஆய்வைத் தொடர்ந்து நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதிலும் இனி எங்கும் குளங்கள், ஏரிகள் தூர்வாரப்பட்டாலும் அங்கு இனி கான்கிரீட் கட்டுமானங்கள் ஏற்படுத்தப்படாது என்ற அறிவிப்பை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என் நேரு அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை வரவேற்று திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"இது தான் தலைவர் மு க ஸ்டாலினின் ஆட்சி. நேற்று காலை 11.30 மணிக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து கோவை மாநகரில் உள்ள குளங்களில் கழக சுற்றுச்சூழல் அணி மற்றும் கோவையிலுள்ள சுற்றுச்சூழல் அமைப்புகள் இணைந்து நடத்திய ஆய்வு தொடர்பான அறிக்கையினை வழங்கினோம்.
அதனை வழங்கிய போதே அமைச்சர் கோவை மாநகராட்சி ஆணையரை அழைத்துப் பேசினார். இன்று அது தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டத்தையும் நடத்தினார். அதன் விளைவாக இனி எங்குக் குளங்கள், ஏரிகள் தூர்வாரப்பட்டாலும் அங்கே கான்கிரீட் தளங்கள் அமைக்கப்படமாட்டாது என்றும், சுற்றுச்சூழலை பேணி பாதுகாக்கப்படும் என்றும் கழக அரசின் முடிவை அமைச்சர் அறிவித்துள்ளார்.
இது தான் மக்களுக்கான அரசு, சுற்றுச்சூழலையும் அதன் அங்கமான பல்லுயிர் தன்மையையும் பாதுகாக்கக் கூடிய அரசு. கழக அரசின் இந்த முடிவிற்காக முதல்வர் அவர்களுக்கும், அமைச்சர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
குளங்கள், ஏரிகள் மற்றும் நீர் வழிப்பாதைகளில் கான்கிரீட் போன்ற செயற்கையான, நீர் உட்புக முடியாத கட்டுமானங்களை ஏற்படுத்தும்போது அதன் நீர் கசிவு பாசனம், கிணறு, குட்டைகளில் நீர் செறிவூட்டும் ஆகியவை முற்றிலுமாகத் தடைப்படும். மேலும் மண்ணாலான கரைகளில் நடைபெறும் பல்லுயிர் பெருக்கமும் அதன் வாழ்விடமும் மொத்தமாக அழியும் சூழல் ஏற்படும்.
எனவே, இயற்கை அமைப்பின் சுழற்சி மாறும் போது சுற்றுச்சூழல் சீர்கேடும் உருவாகிறது. இதனைத் தடுக்கவே குளங்களில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையைச் சமர்ப்பித்தோம். அதை உடனடியாக கவனத்தில் கொண்டு உரிய முடிவு எடுத்த கழக அரசின் செயலுக்கு மீண்டும் ஒரு முறை நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்."
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.