கோவை: கோவை - கேரள எல்லைப் பகுதியான வாளையாரில் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கொரோனா பெருந்தொற்று தடுப்பு மற்றும் ஜிகா வைரஸ் தடுப்புப் பணிகள் தொடர்பாக அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை: கோவை - கேரள எல்லைப் பகுதியான வாளையாரில் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கொரோனா பெருந்தொற்று தடுப்பு மற்றும் ஜிகா வைரஸ் தடுப்புப் பணிகள் தொடர்பாக அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

‘‘கொரோனாவால் உலகம் முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா உருமாறி டெல்டா, டெல்டா பிளஸ் போன்ற புதிய வகை வைரஸ்களும் பரவுகின்றன. அதேபோல், டெங்கு, டெங்குவின் தொடர்ச்சியாக ஜிகா வைரஸ் பரவி வருகிறது. ஜிகா வைரஸ் தாய்மார்களுக்கு தாக்கப்பட்டால் வயிற்றில் உள்ள குழந்தைக்கு சிறிய தலை அளவில் குழந்தை பிறக்கிறது.
தமிழகத்தின் அனைத்து எல்லைப்பகுதியிலும் ஜிகா மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தீவிர சோதனை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இதன் அடிப்படையில் கோவை - கேரள எல்லைப்பகுதியான வாளையார் அருகே பழைய தெரு மாவுத்தம்பதி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நேரடியாக சென்று 95 வீடுகளுக்கு நான் விழிப்புணர்வு ஏற்படுத்தினேன்.
தேங்கி நிற்கும் மழைநீர், தண்ணீர் போன்றவற்றில் உற்பத்தி ஆகி ஏ.டி.எஸ் வகை கொசுக்கள் பகலில் கடிக்கிறது. இந்த வகை கொசுக்களால் ஜிகா, டெங்கு நோய் பரவுகிறது. இதில் இருந்து நம்மை நாமே தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வு தேவை.
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளுக்கும் ஒரு ஊராட்சிக்கு 20 பேர் வீதம், ஒவ்வொரு பேரூராட்சிகளுக்கும் ஒரு பேரூராட்சிக்கு 10 பேர் வீதம் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நகராட்சி, மாநகராட்சிகளுக்கு தேவைக்கு ஏற்ப ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கொசு மருத்து, அபேட் மருந்து ஊற்றுதல் போன்று கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். தமிழகம் முழுவதும் 21 ஆயிரம் பேர் 14 ஆயிரத்து 833 வாகனங்களில் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாளையார் பகுதியில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். கம்பூசியா மீன்கள் கொண்டு கொசு புழுக்களின் லார்வா அழிக்கப்படுகிறது. தமிழகத்தில் ஜிகா வைரஸ் இல்லை. தொடர்ந்து மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
ஜனவரியில் தொடங்கி இந்நாள் வரை 2,500 பேர் டெங்கு பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அதற்கான சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து எல்லைப்பகுதிகளும், ஊரடங்கு விதிமுறைகள்படி வருவாய், சுகாதாரத்துறையினர், காவல்துறையினரைக் கொண்டு ஆய்வு செய்யப்படுகிறது.
தடுப்பூசி பொறுத்தவரை சென்னைக்கு அடுத்து கோவைக்குதான் அதிக அளவில் கொடுக்கப்பட்டுள்ளது. கோவையில் 10 லட்சத்து 97 ஆயிரம் டோஸ் போடப்பட்டுள்ளது. இன்னமும் விரைவுப்படுத்தப்பட உள்ளது.
ஒன்றிய அரசு தடுப்பூசி நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியை பெற்று 75 சதவிகிதம் பிரித்து மாநில அரசுகளுக்கு வழங்குகிறது. தனியார் மருத்துவமனைகளுக்கு 25 சதவிகிதம் வழங்குகிறது.
தனியார் மருத்துவமனை உரிமையாளர்ளிடம் ஆலோசனை மேற்கொண்டு தொழில்நிறுவனங்களின் சி.எஸ்.ஆர் நிதியை பயன்படுத்தி தனியார் மருத்துவமனையில் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்படும்.
தமிழகத்திற்கு 1 கோடியே 86 லட்சத்து 37 ஆயிரத்து 670 தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளது. இதில் 1 கோடியே 82 லட்சத்து 38 ஆயிரத்து 988 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு 12 கோடி தடுப்பூசிகள் வேண்டும். 18 வயது மேற்பட்டவர்கள் 6 கோடி பேர் உள்ளனர். முதுகு தண்டுவட சிகிச்சை தொடர்பாக திருவண்ணாமலையில் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது'' என்று அவர் கூறினார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன், துணை இயக்குநர் சுகாதாரம் செந்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.