கோவை: தமிழகத்தில் கோவில்கள் இடிக்கப்படும் அவலத்தால் மக்களின் மனதில் அரசின் மீது அவநம்பிக்கை ஏற்படுத்தும் என்று மடாதிபதிகள் மற்றும் இந்து முன்னணி மாநிலத் தலைவர் தெரிவித்தார்.
கோவை: தமிழகத்தில் கோவில்கள் இடிக்கப்படும் அவலத்தால் மக்களின் மனதில் அரசின் மீது அவநம்பிக்கை ஏற்படுத்தும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் கடேஸ்வரர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
கோவை ஆடிஸ் வீதியில் உள்ள செய்தியாளர் கூட்டரங்கில் இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் கடேஸ்வரர் சுப்பிரமணியம் மற்றும் இந்து கோயில் மடாதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், இந்து கோயில்களை இடிப்பது மக்கள் மனதில் அரசு மீது நம்பிக்கையற்ற தன்மையை ஏற்படுத்தும் எனவும் உடனடியாக அரசு கோயில்களை இடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு இந்துக்களின் கோவில்களை இடித்து வருவது கண்டனத்துக்குரியது. கோவையில் முத்தணன் குளம் அருகில் மூன்று கோவில்களை மாநகராட்சி இடித்துள்ளது இந்துக்களில் மனதில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கோவில்கள் ஒரு கோவில் நூறு ஆண்டுகளுக்கு பழமையானதும், மற்றொரு கோயில் 125 ஆண்டு பழமையானதும் ஆகும்.
ஆற்றங்கரையிலும், குளக்கரையிலும் காலங்காலமாக கோயில்கள் உள்ளது. ஆற்றில் குளித்துவிட்டு கோவில்களில் வழிபாடு செய்வது இந்துக்களின் மரபு. இந்த பழமையான கோயில்களை ஆக்கிரமிப்பு என்று எப்படி கருதலாம்? ஒரு தனிநபர் குளக்கரையில் கட்டிடம் கட்டினால் அது ஆக்கிரமிப்பு, அதை இடிப்பது தவறில்லை. ஒரு சமுதாயமே வழிபாடு நடத்தும் கோயில்களை ஆக்கிரமிப்பு என்று சொல்வதில் எந்தவித நியாயம்?
கோவில் ஆக்கிரமிப்பு பட்டியலில் வரக்கூடாது. கோவில்கள் காரணமாக ஏதாவது இடையூறு இருந்தால் தமிழகத்தில் உள்ள பாரம்பரிய பெருமை மிக்க மடாதிபதிகள், ஆதீனங்களின் கருத்துக்களை கேட்டு அவர்களின் வழிகாட்டுதல் படி மாற்று இடங்கள் கொடுக்கலாம்.
அவ்வாறு கொடுக்கப்படும் மாற்று இடங்களில் ஆகம விதிகளின்படி பாலாலயம் செய்து அதன் பிறகு சம்மந்தப்பட்ட கோவில் நிர்வாகத்தினர் கோவில் இடத்தை அரசிடம் ஒப்படைப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்துவது தான் சிறந்த வழி.
ஆனால், அரசு அதிகாரிகள் இதை கடைபிடிப்பதில்லை. இந்து கோயில்களை மட்டும் எவ்வித கவலையுமின்றி எடுப்பார் கைப்பிள்ளை போல் கையாளுகிறார்கள். பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் பல்வேறு இடங்களில் அரசுக்கு சொந்தமான இடங்களிலும், பொது இடங்களிலும் உள்ளன. ஆனால் அரசு அதிகாரிகள் அதை கண்டுகொள்வதில்லை. ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது போல் உள்ளது.
குறிப்பாக, கடந்த 1993 நாடாளுமன்றத்தில் மத வழிபாட்டு தலம் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதில் 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற சமயத்தில் எந்தெந்த வழிபாட்டுத்தலங்கள் இருந்தனவோ, அவைகள் அதே நிலையில் இருக்கலாம், வழிபாடுகள் தொடரலாம் என்றும் அதை எந்தக் காரணத்தைக் கொண்டும் யாரும், அரசும் கூட இடிக்க கூடாது என்று அந்த சட்டம் சொல்கின்றது.
ஆனால், இந்த மாநகராட்சி அதிகாரிகள் அந்த சட்டத்தை மீறி உள்ளார்கள். தமிழக அரசு இந்த அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்துக்கள் தங்களுடைய வாழ்வில் ஒவ்வொரு நிகழ்வுகளையும், தங்களுடைய சுக, துக்கம் நிகழ்வுகள் அனைத்தையும் கோயில்களை மையப்படுத்தி வைத்துள்ளார்கள்.
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பெரியவர்கள் சொல். ஆனால், தற்போது நடைபெற்று வருகின்ற சம்பவங்கள் மிகவும் வேதனைக்குரியது. இந்த சம்பவங்களால் உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் மனதில் மிகப்பெரிய ஒரு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு கோவில்களை இடிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
கோவை மட்டும் அல்லாமல் தமிழகத்தில் பல்வேறு கோயில்கள் இடிப்பதற்காக இந்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் என்றும் தகவல்கள் வருகின்றன. அதை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர்.
உதாரணமாக
1. சென்னையில் பேசின் பிரிட்ஜ் ரயில்நிலையம் செல்லும் வழியில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான பூ மாரியம்மன் கோவில்.
2. மதுரை மாவட்டம் இலந்தியேந்தல் பகுதியில் உள்ள 200 வருட பழமையான காவல் தெய்வமாட வாழவந்தாள் கோவில் என இப்படி பல கோயில்களை இடிப்பதற்கு முயற்சிக்கின்றார்கள். இது போன்ற பழமையான கோவில்கள் தொடர்ந்து இடிக்கப்பட்டால் , அரசின் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படும்.
ஆகவே, தமிழக அரசு இத்திட்டங்களை உடனடியாக கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.