கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள், முன்களப்பணியாளா்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள், முன்களப்பணியாளா்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள், முன்களப்பணியாளார்கள் ஆகியோர் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப. இன்று 20.07.2021 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.40க்குட்பட்ட ஆவாரம்பாளையம் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர், அவ்வலுவலகத்தில் தூய்மைப்பணியாளர்களின் வருகைப் பதிவேடுகள் குறித்து ஆய்வு செய்த பின்னர், தூய்மைப் பணியாளர்களிடம் தெரிவிக்கையில், ‘‘தூய்மைப்பணியாளர்கள் நேரம் தவறாமல் பணிக்கு வருகை தர வேண்டும். குப்பைகளை சேகரிக்கும் போது மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்க வேண்டும். தூய்மையான மாநகராட்சியாக திகழ தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்திட வேண்டும். மழைநீர் வடிகால் கால்வாய்களில் அடைக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி நீர் தேங்காமல் செல்லும் வகையில் கால்வாயினை சுத்தப்படுத்திட வேண்டும்.
தூய்மைப்பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும். கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திட வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்'' என அறிவுரைகள் வழங்கிய பின்னா், ‘‘பொதுமக்கள் சாலையோரங்களில் குப்பைகளைக் கொட்டக் கூடாது. குப்பைத் தொட்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும்'' என தெரிவித்தார்.
தொடர்ந்து, ஆவாரம்பாளையம் சுகாதார ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ளும் முன்களப்பணியாளர்களிடம் ஆணையாளர் தெரிவிக்கையில், ‘‘வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல், உடல் சோர்வு, உடல் வெப்பநிலை பரிசோதனை, ஆக்சிஜன் அளவு, ஆகிய பணிகளை கண்டறியும்போது, சளி, காய்ச்சல், இருமல் உள்ளவர்களின் விவரங்களை கோவிட்-19 களஆய்வு பதிவேடுகளில் பதிவு செய்த பின்னர், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு தொற்று (positive) உள்ளது கண்டறியப்பட்டால், உடனடியாக கொரோனா கட்டுப்பாட்டு அறை மற்றும் சுகாதார அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வீட்டில் உள்ள அனைவருக்கும் சளி, காய்ச்சல், இருமல் பரிசோதனை செய்திட வேண்டும். முன்களப்பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். பணி மேற்கொள்ளும்போது முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்த வேண்டும், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்'' என தெரிவித்தார்கள்.
தொடர்ந்து, ‘‘முன்களப்பணியாளா்கள் கொசுவினால் ஏற்படும் நோய்களைத் தடுக்க பொதுமக்களிடம் வீடுகளில் தேவையற்ற உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உபயோகமற்ற பொருட்களை அகற்றிட வேண்டும் என தெரிவிக்க வேண்டும். சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்கி கொசுப்புழு உருவாகாமல் இருக்க வீடுகளில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் கொசுக்கள் மற்றும் கொசுப்புழு
புகாவண்ணம் மூடி வைக்க வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கொசுவினால் ஏற்படும் நோய்களைக் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணாவினை ஏற்படுத்திட வேண்டும்'' என தெரிவித்தார்.
தொடாந்து, வடக்கு மண்டலம் வார்டு எண்.46க்குட்பட்ட கணபதி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், வார்டு எண்.43க்குட்பட்ட வெள்ளக்கிணறு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர், கர்ப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள், சிகிச்சை முறைகள், தாய் சேய் நல பாதுகாப்பு அட்டையில் அதன் விவரங்களை பதிவு செய்து பராமரிப்பது, அதனை கணினியில் பதிவேற்றம் செய்யப்படும் பணிகள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி நகர் நல அலுவலர் மரு.ராஜா, வடக்கு மண்டல உதவி ஆணையாளர் திருமதி.மோகனசுந்தரி, செயற்பொறியாளர் திருமதி.பார்வதி, உதவி செயற்பொறியாளர் திரு.செந்தில் பாஸ்கர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.