கோவை: கோவையில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சூர்யாவுக்கும், செல்வம் என்பருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கிரிக்கெட் விளையாட்டின் போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் சூர்யாவை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, சூர்யா தனது அண்ணன் கார்த்தியிடம் தன்னை செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கியது குறித்து கூறியுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கார்த்தி செல்வத்தை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த முன்விரோதம் முடிவில்லாமல் வளர்ந்து வந்த நிலையில், நேற்று உடையாம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே மதுபோதையில் இருந்த கார்த்தியை அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த செல்வம் உள்ளிட்ட அவரது நண்பர்கள் 6 பேர் தாக்கியுள்ளனர்.
அப்போது, செல்வம் தான் வைத்து இருந்த அரிவாளை கொண்டு கார்த்தியை சரமாரியாக வெட்டியதுடன் தப்பியோடியுள்ளார்.
இதனையடுத்து, ரத்த வெள்ளத்தில் இருந்த கார்த்தியை அவரது நண்பர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய பீளமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததுடன் தப்பியோடிய செல்வம் உள்ளிட்ட அவரது நண்பர்கள் 6 பேரை தேடி வருகின்றனர்.
கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலைவெறி தாக்குதல் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.