கோவை: கொரோனா பெருந்தொற்று பரவல் குறைந்ததைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி, கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு பின்பற்றப்படும் வழிகாட்டு நெறிமுறைகள் என்ன? என்பது குறித்து ஏர்போர்ட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
கோவை: கொரோனா பெருந்தொற்று பரவல் குறைந்ததைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி, கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு பின்பற்றப்படும் வழிகாட்டு நெறிமுறைகள் என்ன? என்பது குறித்து ஏர்போர்ட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
கொரோனா நோய்தொற்று இரண்டாவது அலை பரவல் காரணமாக கோவை சர்வதேச விமான நிலையத்தில் இயக்கப்படும் விமானங்களில் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளன. வழக்கமாக 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் தினமும் இயக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது இதன் எண்ணிக்கை தினமும் ஐந்தாகக் குறைந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவல் குறைந்து வருவதையடுத்து அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அமல்படுத்தியுள்ளது.
இதனால் தற்காலிகமாக சர்வீஸ் நிறுத்தப்பட்ட ஏர்லைன்ஸ் மீண்டும் விமானங்களை இயக்கத் தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் வாரங்களில் கோவை விமான நிலையத்தில் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய சூழலில் கோவை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன என்பது குறித்து ஏர்போர்ட் வட்டாரங்கள் கூறியதாவது, ‘‘கோவை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் மூலம் வந்து இறங்கும் பயணிகள் அனைவரும் 24 மணி நேரத்துக்கு முன் எடுக்கப்பட்ட ‘RT PCR' பரிசோதனையில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு இல்லை என்ற டெஸ்ட் ரிப்போர்ட் வைத்திருக்க வேண்டும். தவிர, கோவையில் தரை இறங்கியபின் விமான நிலையத்தில் ஒவ்வொரு பயணிக்கும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும். தவிர, நோய்தொற்று பாதிப்புக்கான அறிகுறிகள் அதிகம் காணப்படும் பயணிகள் உடனடியாக சுகாதாரத்துறை அலுவலர்கள் உதவியுடன் சிகிச்சை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்படுவார்கள்.
லேசான அறிகுறிகள் இருப்பவர்களுக்கு விமான நிலையத்தில் ‘RT PCR' டெஸ்ட் மேற்கொள்ளப்படும்.
அனைத்து பயணிகளின் விவரங்களும் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.
கடந்த முறை நோய்த்தொற்று முதல் அலை பரவலின் போது மேற்கொள்ளப்பட்ட தங்கும் விடுதிகளில் சில நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்துதல் போன்ற கடுமையான நடைமுறை தற்போது பின்பற்றப்படுவதில்லை.
இருப்பினும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சுகாதாரத் துறை அலுவலர்கள் அவர்களது விவரங்களை பெற்றுக் கொள்வதுடன் வீடுகளில் தனிமைபடுத்த வேண்டும் என்ற அறிவுரை வழங்கி அவர்களை கண்காணிக்கும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கோவையிலிருந்து பயணிக்க ஆன்லைன் முறையில் பதிவு (E Registeration) கட்டாயம் என்ற விதிமுறை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி, வால்பாறை, கொடைக்கானல் உள்ளிட்ட மலை சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. இருப்பினும் அந்தப் பகுதிகளில் வசிக்கும் அல்லது பூர்வீகமாகக் கொண்ட பயணிகள் செல்ல ‘இ பாஸ்' கட்டாயம் பெற வேண்டியது அவசியமாகும்.
கோவையிலிருந்து விமானங்களில் புறப்பட்டுச் செல்லும் பயணிகளுக்கு என்ன வழிமுறைகள்? இதேபோல், கோவையில் இருந்து உள்நாட்டில் பல்வேறு நகரங்களுக்கு செல்லும் பயணிகள் 24 மணி நேரத்துக்கு முன் எடுக்கப்பட்ட ‘RT PCR' பரிசோதனையில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு இல்லை என்ற டெஸ்ட் ரிப்போர்ட் வைத்திருக்க வேண்டும். தவிர தாங்கள் செல்லும் மாநிலங்களில் அந்த மாநில அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்பது டிக்கெட் முன்பதிவு செய்யும் பொழுதே தெரிவிக்கப்படும். அவற்றை பின்பற்ற வேண்டும்.
சர்வதேச விமான போக்குவரத்து பிரிவில் கோவையில் இருந்து சிங்கப்பூர், இலங்கை மற்றும் ஷார்ஜாவுக்கு விமான சர்வீஸ் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், தற்பொழுது ‘ஏர் அரேபியா' நிறுவனம் சார்பில் கோவை - ஷார்ஜா இடையே மட்டும் விமான சர்வீஸ் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை என்ற கணக்கில் மட்டுமே இயக்கப்படுகிறது. இருப்பினும், அந்த விமானங்களில் கோவைக்கு வருவதற்கு மட்டுமே பயணிகளுக்கு அனுமதி உள்ளது. இங்கிருந்து புறப்பட்டு செல்லும் விமானங்களில் பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. தற்பொழுது ஐக்கிய அரபு நாட்டின் அரசு இரண்டு முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டு அதற்கான ஆவணங்களை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தியாவில் அதிகம் செலுத்தப்படும் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பு ஊசிகளை செலுத்திக் கொண்டவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்குமா என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல் வரவில்லை. இதனால் கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு இயக்கப்படும் விமானத்தில் பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. புதிய விதிமுறைகளுடன் எதிர்வரும் நாட்களில் பயணிகள் விமானத்தில் செல்ல அனுமதி வழங்கப்படலாம்'' என்று ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.