கோவை: கோவையில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், கடை முன்பு கற்பூரம் ஏந்தி தேங்காய் உடைத்தும், மது பாட்டிலில் ராக்கெட் விட்டு மதுப்பிரியர்கள் கொண்டாடினர்.
கோவை: கோவையில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், கடை முன்பு கற்பூரம் ஏந்தி தேங்காய் உடைத்தும், மது பாட்டிலில் ராக்கெட் விட்டு மதுப்பிரியர்கள் கொண்டாடினர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதில் பாதிப்பு அதிகம் இருந்த கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி உட்பட 11 மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், அனைத்து மாவட்டங்களுக்கும் நாளை முதல் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோவை உட்பட 11 மாவட்டங்களிலும் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட தொடங்கியுள்ளன.
மதுபான கூடங்கள் இயங்காது என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கோவையில் உள்ள 293 டாஸ்மாக் கடைகளிலும் இன்று திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மதுக்கடைகள் திறப்பை கொண்டாடும் வகையில், கோவை புலியகுளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு மது பிரியர்கள் தேங்காயில் கற்பூரம் வைத்து வழிபட்டு மது வகைகளை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
இதேபோல, உக்கடம் - சுங்கம் புறவழிச்சாலையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு மது பிரியர்கள் சிலர் மது பாட்டிலில் ராக்கெட்டுகள் விட்டும், பட்டாசுகள் வெடித்தும் தீபாவளி பண்டிகை போல கொண்டாடி மகிழ்ந்தனர்.
கோவை மற்றும் அதன் அண்டை மாவட்டங்கள் அனைத்திலும் டாஸ்மாக் கடைகள் நீண்டகாலமாக அடைக்கப்பட்டிருந்ததால் பலர் திண்டுக்கல் திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் இருந்தும் கர்நாடகாவில் இருந்தும் மதுபாட்டில்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கோவையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது மது பிரியர்களை அலாதி இன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.