கோவை: கருப்பு பூஞ்சை நோயானது புதிய வகை நோயல்ல. இதுபல வருடங்களாக உள்ள நோய். கருப்பு பூஞ்சை நோய் கொரோனா நோயைவிட கொடியது. கொரோனா தாக்கம் குறைந்து கொண்டு வரும் பொழுது கருப்பு பூஞ்சையின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு வருகிறது மக்களே உஷார் என கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கருப்பு பூஞ்சை நோய் குறித்து விளக்கம் அளித்துள்ளது.
கோவை: கருப்பு பூஞ்சை நோயானது புதிய வகை நோயல்ல. இதுபல வருடங்களாக உள்ள நோய். கருப்பு பூஞ்சை நோய் கொரோனா நோயைவிட கொடியது. கொரோனா தாக்கம் குறைந்து கொண்டு வரும் பொழுது கருப்பு பூஞ்சையின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு வருகிறது மக்களே உஷார் என கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கருப்பு பூஞ்சை நோய் குறித்து விளக்கம் அளித்துள்ளது.
கருப்பு பூஞ்சை குறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அளித்துள்ள விளக்கத்தில், ‘‘சாதாரணமாக உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்களுக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் மற்றும் சிறுநீரக கோளாறு உள்ளவர்களுக்கும் எளிதாகத் தாக்கக் கூடிய நோய். சில சமயங்களில் நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்களையும் தாக்கும்.
தற்சமயம் கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றது. இப்பூஞ்சை கிருமியானது நாம் சுவாசிக்கும் காற்றில் பரவலாக உள்ளது. சாதாரணமாக நமது வீட்டில் உள்ள அழுகிய காய்கறிகள், அழுகிய பழ வகைகள் செடிகள் மற்றும் நாள்பட்ட பிரட் (ரொட்டி) ஆகியவற்றில் காணப்படும் இக்கிருமி நாம் சுவாசிக்கும் காற்றில் பரவி மூக்கின் உள்ளே வருகின்றது. வந்தபிறகு நமது நோய் எதிர்ப்பு சக்தி சரியாக இருக்கும் பட்சத்தில் நம்மை ஒன்றும் செய்யாது. நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது இந்தக் கிருமியானது மூக்கில் உள்ள சதைகளில் உட்சென்று வளர்கின்றது. வளர ஆரம்பித்தவுடன் இக்கிருமியானது சதைக்குள்ளும் மற்றும் இரத்த நாளங்களிலும் சென்று பரவுகின்றது.
ஆரம்ப கட்டத்தில் இது மூக்கின் உள்ளே மட்டும் இருக்கும்போது மூக்கடைப்பு மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் கலந்த சளி வருதல் ஆகிய அறிகுறிகள் இருக்கும். இந்த சமயத்திலேயே இந்த நோயை நாம் கண்டறிந்தால் எளிதாக குணமாக்கி விடலாம். தாமதிக்கும் பட்சத்தில் இது கண்ணையும் மூளையையும் பாதித்து கண்பார்வை இழப்பும், உயிர் இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது.
பெருத்தொற்றில் இருந்து மீண்டாலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரை அளவை மருத்துவரின் ஆலோசனையுடன் கட்டுக்குள் வைத்துக் கொள்ளவேண்டும்.
கொரோனா தாக்கம் உள்ள பொழுதோ அல்லது கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்ட பிறகோ கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவேண்டும்.
1. மூக்கடைப்பு
2. மூக்கில் இருந்து ரத்தம் கலந்த சளி வருதல்
3. முகத்தில் வலி
4. முகத்தில் மரமரப்பு
5. கண்கள் சிவப்பாக மாறுவது, கண்ணை சுற்றி வீக்கம், கண் வலி மற்றும் கண் பார்வை குறைபாடு
6. தலைவலி
7. பல் வலிமற்றும் பற்கள் ஆடுவது
இந்த நோய் வராமல் பாதுகாப்பதற்காக வேண்டி நாம் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சரியான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். கைவைத்தியம் செய்யக் கூடாது.
சர்க்கரை நோய், காச நோய் மற்றும் புற்று நோய் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
துணியால் ஆன முகக்கவசம் அணிபவர்கள், முகக்கவசம் ஈரம் ஆகிவிட்டால் அதை அணியக்கூடாது. தினமும் முகக் கவசத்தை துவைத்து காயவைத்து உபயோகிக்க வேண்டும். ஒரே முகக் கவசத்தை தொடர்ச்சியாக உபயோகிக்கக்கூடாது.
நமது கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த கருப்பு பூஞ்சை நோய்க்கான அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சை மிகவும் சிறப்பாக அளித்து வருகிறோம்.
இந்த நோய்க்கு, மருத்துவமனை டீன் பேராசிரியர் நிர்மலாவின் வழிகாட்டுதலின்படி காது-மூக்கு-தொண்டை துறை தலைவர் பேராசிரியர் அலி சுல்தான் தலைமையில், கண் அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் ஜீவ கலா, மயக்க மருந்தியல் துறை தலைவர் கல்யாணசுந்தரம், தாடை மற்றும் முகச் சீரமைப்பு துறை மருத்துவர் ரம்யா, பொது மருத்துவத் துறை பேராசிரியர் சுவாமிநாதன், நோய்க்குறியியல் துறை தலைவர் தனலட்சுமி, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் வெங்கடேசன் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் ரமணன் மற்றும் அனைத்து துறை மருத்துவர்கள் முதுநிலை மருத்துவ மாணவர்கள் செவிலியர்கள் இணைந்து ஒரு குழுவாக இதற்கான சிகிச்சையை செய்து கொண்டிருக்கின்றோம்.
இந்த நோய் பாதித்த நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்த உடன் அவர்களை உடனடியாக அட்மிட் செய்து பரிசோதனை மற்றும் எண்டோஸ்கோபி சோதனை செய்யப்படுகின்றது. உடனடியாக மருந்துகளும் கொடுக்கப்படுகின்றது.
இதுவரை 264 நபர்களுக்கு எண்டோஸ்கோபி பரிசோதனை செய்து உடனடியாக மூக்கில் உள்ள அழுகிய சதைகளை எடுத்து திசு பரிசோதனைக்கு அனுப்பி அதனுடைய முடிவு தெரிந்த உடன் எண்டாஸ்கோபி மூலம் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. முகத்தில் உள்ள எலும்புகள் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அந்த எலும்புகளும் தேவைக்கேற்ப அகற்றப்பட்டு வருகின்றது.
இதுவரை நமது மருத்துவமனையில் 110 நபர்களுக்கு சைனஸ் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை முறையில் அறுவை சிகிச்சை செய்து இந்த நோயை குணப்படுத்தி உள்ளோம். சுமார் 30 நபர்கள் நோய் முற்றிய நிலையில் வந்ததால் அவர்களுடைய கண்பார்வை பறிபோய்விட்டது. ஆனால், அறுவை சிகிச்சை செய்து நோயை குணப்படுத்தி விட்டோம். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து விட்டால், இந்த நோயை பரிபூரணமாக குணமாகி விடலாம். தாமதித்தால் கண்பார்வை இழப்பு மற்றும் உயிர் இழப்பு ஏற்படும்.
இந்த நோயக்கு அறுவை சிகிச்சை மட்டுமின்றி ஆம்பொடரிசின் பி எனப்படும் பூஞ்சைக் கொல்லி மருந்தையும் கொடுக்க வேண்டும். இந்த மருந்து நமது மருத்துவமனையில் தேவையான அளவு உள்ளது.
சிறப்பாக செயல்படும் இந்த மருத்துவ குழுவினரை கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பேராசிரியர் நிர்மலா வெகுவாக பாராட்டினார்.
பொதுமக்கள் யாரும் கருப்பு பூஞ்சை நோய் குறித்து அச்சப்படத் தேவை இல்லை. ஆனால், கண்டிப்பாக விழிப்புடன் இருக்கவேண்டும். அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.