கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைப்பது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தப்படும் - விளையாட்டு துறை அமைச்சர் நேரில் ஆய்வு
கோவை: தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், 47 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு துவக்கி வைக்கப்பட்ட நேரு உள் விளையாட்டு அரங்கை பார்வையிட்டார்.
பின்னர், கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள ஹாக்கி மைதானம் அமைக்க நடைபெற்றுவரும் பணிகளை அவாவு செய்தார்.
விளையாட்டு துறை மாவட்ட அதிகாரி ரவிசந்திரன், அமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பிறகு அங்கு இருந்த தடகள வீரர்-வீராங்கனைகளுடன் பேசிய அமைச்சர், அவர்களுடைய தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்க கூடிய ஏழை எளிய விளையாட்டு மாணவ-மாணவிகளுக்கு ஊட்டச்சத்து அரிசி, விளையாட்டு ஆடைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை அளிப்பதுடன் அவர்களது திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக செயலாற்றி வருகிறார், நமது முதல்வர் என்று புகழாரம் சூட்டினார். மேலும், கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
"முன்னாள் முதல்வர் கலைஞரால் அடிக்கல் நாட்டபட்டு கட்டிமுடிக்கபட்டு 47 ஆண்டுகள் ஆகும் இந்த நேரு ஸ்டேடியம் கடந்த 10 ஆண்டுகளில் பராமரிப்பு இல்லாமல் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இது தொடர்பாக முதல்வர் கவனத்திற்கு எடுத்து சென்று உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தவர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அறிவிப்புகள் அனைத்தும் வெற்று அறிவிப்புகள் எனவும் கடந்த 10 ஆண்டுகளில் விளையாட்டு துறை மேம்படாமல் இருந்ததற்கு இந்த நேரு ஸ்டேடியமே சான்று", என்றார்.
இதைத் தொடர்ந்து கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றுசூழல் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் மெய்யநாதன், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உட்பட மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுடன் தென்மேற்கு பருவமழை, நீர்நிலைகள், சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்து, அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.