கோவை: கோவையில் கொரோனா மூன்றாம் அலையை தடுக்கும் விதமாக பலவேறு தடுப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் ஒருங்கிணைத்து, தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவையில் கொரோனா மூன்றாம் அலையை தடுக்கும் விதமாக பலவேறு தடுப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் ஒருங்கிணைத்து, தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, கோவை மாநகர் மற்றும் ஊரக பகுதியில் தினமும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, கையிருப்பு உள்ள தடுப்பூசிகளை சுகாதாரத்துறையினர் செலுத்தி வருகின்றனர். கூடவே, பொதுமக்களுக்கு தடுப்பூசி குறித்தான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது,
இந்நிலையில், மலைகிராம பழங்குடி மக்கள் யாரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வராததால், அந்தந்த மலைகிராமங்களுக்கே நேரில் சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டனர். இதற்கான பணிகள் இன்று துவக்கப்பட்ட நிலையில், கோவை தொண்டாமுத்தூரை அடுத்த முள்ளாங்காடு, கல்கொத்திபதி, சர்க்கார் பூரத்திபதி, வெள்ளைபதி, சீங்கப்பதி உள்ளிட்ட மலைகிராமத்திற்கு 500 தடுப்பூசிகளுடன் சுகாதாரத்துறை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் சென்றனர்.
தடுப்பூசி குறித்து எவ்வித விழிப்புணர்வும் இல்லாத மலைவாழ் மக்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளை கண்டவுடன் தப்பி ஓடினர்.
சிலர் தோட்டப் பகுதிகளுக்கு சென்று ஒளிந்து கொண்ட நிலையில் சிலர் மரங்களில் ஏறி தப்பிக்க முயற்சித்தனர்.

இதற்கிடையே, அதிகாரிகளிடம் முதியவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 600 வாக்காளர்கள் உள்ள அந்த கிராமத்தில் 57 பேரும், 90 பேர் வசிக்கும் கிராமத்தில் வெறும் 7 நபர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதையடுத்து மருத்துவர்கள், செவிலியர்கள் கிராம மக்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர். பின்னர், நீண்ட நேரம் காத்தருந்த அதிகாரிகளிடம், தற்போது தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றால் நாங்களும் தடுப்பூசி செலுத்தி கொல்கிறோம் என கிராம மக்கள் கூறி விட்டு சென்று விட்டனர்,
இதனால் எடுத்துச் சென்ற தடுப்பூசிகள் மீண்டும் கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, தொடர் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.