திருப்பூர்: பல்லடம் அருகே பாறைக்குழி அருகே விளையாடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர்.
திருப்பூர்: பல்லடம் அருகே பாறைக்குழி அருகே விளையாடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி லட்சுமி. திருச்சியைச் சேர்ந்த இவர், பள்ளிப்பாளையத்தில் வாடகைக்கு குடோன் எடுத்து விசைத்தறி கூடம் நடத்தி வருகிறார்.
இவர்களுக்கு சங்கவி(11), என்ற மகளும் சாந்தனு(8) என்ற மகனும் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால், வீட்டில் இருந்து வருகின்றனர்.
இந்தநிலையில், வீட்டின் அருகில் உள்ள பாறைக்குழிக்கு அடிக்கடி இருவரும் சென்று விளையாடும் பழக்கம் உள்ளதாக தெரிகின்றது.இன்று விளையாட சென்ற இருவரும் நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை.அதனை தொடர்ந்து அவர்களது பெற்றோர்கள் அங்கு சென்று பார்த்த பொழுது இருவரையும் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர்கள் அருகில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதனை அடுத்து பாறைக்குழியில் இறங்கி தண்ணீரில் தேடிப் பார்த்தபோது சங்கவியின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. அருகில் இருந்தவர்கள் உதவியுடன் சாந்தனுவைத் தேடிப் பார்த்தனர். 80 அடி ஆழம் என்பதால் சாந்தனுவின் உடல் கிடைக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து, பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை, அடுத்து சம்பவ இடம் வந்த தீயணைப்புத் துறையினர், இரண்டு மணி நேரமாக சிறுவனின் உடலைத் தேடி வருகின்றனர். பல்லடம் வட்டாட்சியர் தேவராஜ், மங்கலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாறைக்குழி கே.டி.என் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமானதும் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இதே பாறைக்குழியில் இரண்டு சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.