கோவை: தமிழகத்தின் 30வது டிஜிபியாக, இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாக திகழும் சைலேந்திரபாபு தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை: தமிழகத்தின் 30வது டிஜிபியாக, இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாக திகழும் சைலேந்திரபாபு தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
'உடலினை உறுதி செய் இலக்கினை இறுதி செய்' என நாள்தோறும் இளைஞர்களுக்கு தனது நிகழ்ச்சிகள் வாயிலாக உற்சாகமூட்டி வரும் சைலேந்திரபாபு ஐபிஎஸ் தற்போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
வாழ்க்கையில் பதில்களை விட கேள்விகள் மிக முக்கியமானது. கேள்விகள் தான் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஒவ்வொரு மேடையிலும் இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டியவர் சைலேந்திரபாபு.
இவர் தமிழ்நாட்டின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி மாவட்ட குழித்துறையில் 1962 ம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி பிறந்தவர். பின்னாளில் மதுரையில் உள்ள தமிழக விவசாய கல்லூரியில் பிஎஸ்சி வேளாண் படிப்பும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மக்கள்தொகை ஆய்வுப்பிரிவில் முதுகலை மேல்படிப்பும் முடித்தார்.
மேலும் 'காணாமல் போன குழந்தைகள்' என்கின்ற தலைப்பில் பகுப்பாய்வு செய்து சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்ற இவர், பின்னாளில் மனித ஆற்றல் பிரிவில் முதுகலை பட்டமும் (எம்பிஏ) பெற்றார். இதன் பின்னர் 1987 ஆம் ஆண்டு தமிழக கேடரில் ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்வு பெற்றார்.
இவர் முதன் முதலில் தர்மபுரி மாவட்டத்தில் தன்னுடைய பணியை ASP யாக தொடங்கினார் பின்னர் கடலூர், ராமநாதபுரம் என பல மாவட்டங்களில் பணியாற்றியவர். பின்பு, லஞ்ச ஒழிப்புத்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை என பல துறைகளில் பணியாற்றிய அனுபவர் மிக்கவர். சந்தன கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படையின் ஐஜியாக நியமிக்கப்பட்டவர்.
2004ம் ஆண்டு அன்றைய காலகட்டத்தில் சென்னையில் ரவுடிகளின் தொல்லை தலை ஓங்கி இருந்த காலகட்டத்தில் அப்பொழுது சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராக இருந்த பொழுது ரவுடிகளை தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வந்தார், மேலும் பிரபல ரவுடிகளான கேட் ராஜேந்திரன், டைசன் சேகர், பாஸ்கர் வடிவேலு உள்ளிட்ட பிரபல ரவுடி கொலை ஆட்டம் காண வைத்தவர்.
அதுமட்டுமின்றி, இவர் வட சென்னையில் நான்கு ஆண்டுகள் இணை ஆணையராகவும் பதவி வகித்து வந்தார். 2010ம் ஆண்டு கோவை ஆணையராக இருந்த பொழுது இவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் வடக்கு மண்டல ஐஜியாக பதவி உயர்வு பெற்றார்.
மேலும், பின்நாளில் வடக்கு மண்டல ஐஜி ஆக பதவி ஏற்ற பிறகு கடலோர பாதுகாப்பு குழு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார். இவர் சிறைத்துறை தலைவராக இருந்த பொழுது கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை வகுத்து கொடுத்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். தீயணைப்பு மீட்பு பணிகள் துறையின் டிஜிபி ஆகவும், ரயில்வே காவல்துறை டிஜிபி என பல்வேறு பதவிகளை வகித்து வந்தவர்.
தற்பொழுது தமிழக சட்ட ஒழுங்கு டிஜிபியாக திரு.சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் தன்னுடைய துறையில் சிறப்பாக கடமையாற்றியமைக்கான குடியரசுத்தலைவர் விருது, உயிர் காக்கும் பணிகளை மேற்கொண்டமைக்கான பிரதமர் விருது, தமிழக முதலமைச்சரின் கேலண்டரி விருது, தமிழக சிறப்பு டாஸ்க் ஃபோர்சின் கேலண்டரி காவல்துறை பதக்கம் உள்ளிட்ட பல்வேறு விருதுககளை பெற்றுள்ளார்.
காவல்துறை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எடுத்துக்காட்டாக விளங்கும் சைலேந்திரபாபு தனது 53 வயதிற்குப் பிறகு கூட காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம், இந்தியா முதல் இலங்கை வரை நீச்சல் பயணம் என இந்த நிமிடம் வரை மக்களுக்காக ஓடிக் கொண்டிருக்கிறார். தற்பொழுது இவரை தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தமிழக அரசு நியமித்ததில் பலர் பெருமிதம் கொள்கின்றனர். இன்றும் இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாக உலா வந்து கொண்டிருக்கிறார்.