கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தகரக் கொட்டகையில் தரையில் கிடத்தப்பட்டுள்ள வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தகரக் கொட்டகையில் தரையில் கிடத்தப்பட்டுள்ள வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2600 ஐ கடந்துள்ளது. வைரஸ் தொற்று பாதித்தவர்கள் பெரும்பாலானோருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் இடம் இல்லாததால், பிணவறைக்கு அருகிலேயே வைரஸ் தொற்று பாதித்து உயிரிழந்தவர்களின் உடல்களை வைக்க தகர ஷீட்டுகள் கொண்டு தற்காலிக கொட்டகை அமைக்கப்பட்டிருக்கிறது.
இதில் கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்தவர்களின் உடல்கள் தரையில் கிடத்தப்பட்டு, ஊழியர்கள் கொரோனா பாதுகாப்பு ஆடைகளின்றி பிணங்களை கையாளுகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க வரும் உறவினர்களுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் எழுந்துள்ளது. எனவே, மருத்துவமனை நிர்வாகம் உரிய தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.