கோவை: தொழில் மற்றும் வணிக அமைப்பினருடன் நடத்தப்பட்ட கூட்டத்தை தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு கோவை தொழில் துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கோவை: தொழில் மற்றும் வணிக அமைப்பினருடன் நடத்தப்பட்ட கூட்டத்தை தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு கோவை தொழில் துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா) தலைவர், ரமேஷ் பாபு தெரிவித்ததாவது,
சென்னையில் நடந்த கூட்டத்தில் நாங்கள் சமர்ப்பித்த சில கோரிக்கைகள் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசால் நல்ல முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருப்பதற்கு கொடிசியா மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
குறிப்பாக, தகுதியுள்ள அனைவருக்கும் சிறப்பு முகாம்கள் மூலமாக கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்தல், இந்த நிதியாண்டு ஒதுக்கப்பட்டுள்ள முதலீட்டு மானிய தொகை 250 கோடி ரூபாயில், 60 சதவீத தொகையை அதாவது 168 கோடி ரூபாயை சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக ஒதுக்கப்படும். மேலும் இத்தொகை ஒரே தவணையில் வழங்க வகை செய்யப்படும். ஏற்கனவே உள்ள முத்திரைத் தாள் பதிவு தொகைக்கான விலக்கு வரும் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்படும் என்பது உள்ளிட்ட அனைத்து அறிவிப்புகள் மிகவும் வரவேற்கத்தக்கது.
அதேபோல, தமிழக அரசின் இந்த நேர்மையான அணுகுமுறைக்கு முதலமைச்சரை பாராட்டுகிறோம். தற்போது உள்ள சிக்கலான காலகட்டத்தில் அரசாங்கத்தின் மேற்கண்ட அறிவிப்புகள் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பெருமளவு பயன் அளிப்பதோடு நல்லதொரு நிவாரணமாகவும் அமையும் என்று உறுதியாக நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பின்னர், தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர்கள் சங்க(SIEMA) தலைவர் கார்த்திக் பேசுகையில்,
சென்னையில் நடைபெற்ற கூட்டத்தை தொடர்ந்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் அனைத்தும் வரவேற்கத்தக்கது. குறிப்பாக, நாங்கள் கோரிக்கைகள் முன்வைத்து 48 மணி நேரத்துக்குள் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது மிகவும் பாராட்டுக்குரியது. தொழில்துறை தேவைகள் சரியான முறையில் புரிந்து கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வங்கிகளில் கடன் உதவி பெறும் பொழுது வசூலிக்கப்படும் MOD(Memorandum of Deposit), விளக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக மானியத்துக்கு 168 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புரொஃபஷனல் வரி செலுத்துதல் லைசன்ஸ் பெறுதல் உள்ளிட்டவற்றுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வங்கி கடன் செலுத்துவதற்கு கால நீட்டிப்பு செய்ய ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு மூலம் அழுத்தம் கொடுப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் மிகவும் வரவேற்கத்தக்கது. இந்த அறிவிப்புகள் தொழில் துறையினருக்கு மிகவும் பயனளிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, கோவை திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கம்(காட்மா) தலைவர் சிவகுமார் பேசுகையில்,
சுய முதலீடு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்த நிதியாண்டில் முதலீட்டு மானியம் வழங்க 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 60 சதவீதமான 168 கோடி ரூபாய் உடனடியாக நிறுவனங்களுக்கு விடுவிக்கப்படும் என்று அறிவிப்பு தகுதியான அனைத்து நிறுவனங்களுக்கும் மானியம் கிடைக்க வழிவகை செய்யும். குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் உதவி பெறும் போது செலுத்த வேண்டிய முத்திரைத் தாள் பதிவு கட்டணம் செலுத்துவதிலிருந்து டிசம்பர் 31 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது.
அதேபோல, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்தில் உள்ள முதலீட்டு மானியம் பெற விற்று முதல் 25 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்ற விதிமுறையிலிருந்து டிசம்பர் 31 வரை விலக்கு அளிக்கப்படுகிறது உள்ளிட்ட அறிவிப்புகள் எங்கள் சங்கம் சார்பில் மனமார வரவேற்கிறோம். அதே நேரத்தில் மாநில அரசு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் தொழில் முனைவோருக்கு கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட சலுகைகள் கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான தொழில் முனைவோருக்கு கிடைக்கவில்லை. செயல்படாத கணக்குகளுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகள் கிடைக்கவில்லை. ஏற்கனவே கடன் பெற்றவர்களுக்கு 20% நோய்தொற்று பேரிடர் கால கடனாக வங்கிகளால் வழங்கப்பட்டது.
ஆனால், அதிலும் கடன் தவணையை 60 நாட்களுக்குப் பின் செலுத்திய தொழில்முனைவோர்களுக்கு SMA 2 என்ற விதியினை காரணம் காட்டி வங்கிகளால் கடன் வழங்காமல் தட்டிக் அளிக்கப்பட்டது. இது போன்றவற்றை கவனத்தில் கொண்டு தொழில்முனைவோர்கள் தங்கள் தொழிலைத் தொடர்ந்து நடத்திட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் வட்டியில்லாக் கடன்கள் அளிக்கப்பட வேண்டும். தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்முனைவோர் அனைவருக்கும் அவர்கள் தங்கள் வங்கி தவணைகளை செலுத்துவதற்கு மூன்று மாத கால நீட்டிப்பு செய்து கொடுக்க வேண்டும். அந்த மூன்று மாத காலத்திற்கு அவர்களது கடன்களுக்கு எவ்விதமான வட்டியும் வசூலிக்கக்கூடாது.
மேலும், எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு ஜிஎஸ்டி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அந்த மூன்று மாதங்களுக்கு எவ்விதமான வட்டி அபராதம் வசூலிக்க கூடாது. தொழில் முனைவோர்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அவற்றை நிறைவேற்றித் தருமாறு மத்திய அரசை வலியுறுத்தி தொழில் மற்றும் தொழில் முனைவோர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.