கோவை: தேர்தல் களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்து இருந்தார்கள், என கமலஹாசன் சற்றுமுன் பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கோவை: தேர்தல் களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்து இருந்தார்கள், என கமலஹாசன் சற்றுமுன் பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:- சீரமைப்போம் தமிழகத்தை எனும் பெரும் கனவை முன்வைத்து முதலாவது சட்டமன்ற தேர்தலை சந்தித்தோம். ஒரு பெரிய போரில் திறம்பட செயல்படும் களத்தில் எதிரிகளோடு, துரோகிகளும் கலந்து இருந்தார்கள் என்பதை கண் கூடாக கண்டோம்.
துரோகிகளை களை எடுக்க வேண்டும் என்பது தான் அனைவரின் ஒருமித்த குரலாக இருந்தது. அப்படி களைய வேண்டியவர்களின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் டாக்டர் ஆர். மகேந்திரன். ஆனால் அவர் கட்சியில் ஜனநாயகம் இல்லை என்கிறார். ஜனநாயகமும் சமயங்களில் தோற்றுப் போகும் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் இவர்தான். முகவரி கொடுத்தவர்களின் முகங்களையே எடுத்துக் கொள்ள துணிந்தார்.
கட்சிக்காக உழைக்க தயாராக இருந்த பல நல்லவர்களை தலையெடுக்க விடாமல் செய்தது இவரது சாதனை. நேர்மை இல்லாதவர்களுக்கும் திறமை இல்லாதவர்களுக்கும் வெளியேறும்படி மக்கள் நீதி மையத்தின் கதவு திறந்து இருக்கும் என்பதை அனைவரும் அறிவர். தன்னுடைய திறமயின்மையும், நேர்மையின்மையும், தோல்வியையும் அடுத்தவர் மீது பழி போட்டு அனுதாபம் தேட முயற்சிக்கிறார். இது தன்னை எப்படியும் நீக்கி விடுவார்கள் என்பதை தெரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக விலகிக் கொண்டார்.
ஒரு களையே தன்னை களை என்று புரிந்து கொண்டு தன்னைத்தானே நீக்கி கொண்டதில் உங்களைப் போல நானும் மகிழ்கிறேன். இனி நம் கட்சிக்கு ஏறுமுகம்தான். என்னுடைய வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே வெளிப்படையானவை. நான் செய்த தவறுகளை மறைக்கவோ, மறுக்கவோ ஒருபோதும் முயற்சித்தது இல்லை. என் சகோதர சகோதரிகளான மக்கள் நீதி மைய குடும்ப உறுப்பினர்களுக்கு மனம் தளர வேண்டாம் என சொல்ல வேண்டியதில்லை.
உங்களின் வீரமும், தியாகமும் ஊர் அறிந்தவை. தோல்வியின் போது கூடாரத்தை பிடித்துக் கொண்டு ஓடும் கோழைகளைப் பற்றி நாம் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. கொண்ட கொள்கையில் தேர்ந்த பாதையில் சிறிது மாற்றம் இல்லை. மண் மொழி மக்கள் காக்க களத்தில் நிற்போம். இவ்வாறு, கமலஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.