கோவை: கோவையில் கஞ்சா வியாபாரிகள் பயங்கர மோதிக்கொண்டதில் இருவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை: கோவையில் கஞ்சா வியாபாரிகள் பயங்கர மோதிக்கொண்டதில் இருவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சூலூர் அருகே உள்ள பாரதி புரத்தை சேர்ந்த ஆனந்தகுமார் குடிபோதையில் அக்கம்பக்கத்தினரிடம் தகராறு செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு சிங்காநல்லூர் கக்கன் நகர் பகுதியில் உள்ள தனது உறவினரான வசந்தகுமார் (28) வீட்டுக்கு சென்று கற்களை வீசித் தாக்கி உள்ளார்.
இதனை தட்டிக் கேட்பதற்கு இன்று காலை வசந்தகுமார் தனது நண்பர்கள் இரண்டு பேரை அழைத்துக் கொண்டு ஆனந்தகுமார் வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்த ஆனந்தகுமாருடன் அவர்கள் மூவரும் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது ஆனந்த குமாருக்கு ஆதரவாக அவரது மகன்கள் சதீஷ் சரவணகுமார் மற்றும் ஹரி ஆகியோர் வசந்தகுமார் ஆட்களிடம் வாக்குவாதம் செய்திருக்கின்றனர். அப்போது வாக்குவாதம் முற்றியதால் ஆனந்தகுமார், மற்றும் அவரது மகன்கள் அனைவரும் வசந்த குமாரையும் அவருடன் வந்தவர்களையும் ஓட ஓட விரட்டி கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு பயங்கரமாக தாக்கினர்.
உடலில் பல இடங்களில் கத்திக்குத்து பட்ட வசந்தகுமார் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து பலியானார். வசந்தகுமார் உடன் வந்த அவரது நண்பர்கள் மகேஷ்குமார் மற்றும் மற்றொருவர் காயம் அடைந்தனர். இந்த நிலையில் மகேஷ் குமார் சிகிச்சை பலன் அளிக்காமல் சற்று நேரத்திற்கு முன்பு பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தகுமார், சதீஷ், சரவணகுமார், ஹரி ஆகிய 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
போலீசாரின் விசாரணையில் இருதரப்பினரும் சூலூரில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து பேரை கைது செய்திருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.