கோவை: நீண்டநாட்களாக தொடரும் கொரோனா நோய்தொற்று காரணமாக மக்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் சோர்வடைந்து உள்ளனர். 'Pandemic Fatigue' என்று சொல்லக்கூடிய தொற்று சோர்வு காலகட்டத்தில் மனநலத்தை காக்க தேவையான சில முக்கிய ஆலோசனைகளை மனநல ஆலோசகர் டாக்டர் தினேஷ் பெரியசாமி கூறியுள்ளார்.
கோவை: நீண்டநாட்களாக தொடரும் கொரோனா நோய்தொற்று காரணமாக மக்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் சோர்வடைந்து உள்ளனர். 'Pandemic Fatigue' என்று சொல்லக்கூடிய தொற்று சோர்வு காலகட்டத்தில் மனநலத்தை காக்க தேவையான சில முக்கிய ஆலோசனைகளை மனநல ஆலோசகர் டாக்டர் தினேஷ் பெரியசாமி கூறியுள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் மனநலத்தை காக்க தேவையான சில முக்கிய ஆலோசனைகளை மனநல ஆலோசகர் டாக்டர் தினேஷ் பெரியசாமி, 'SimpliCity' நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், 'உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் நீண்ட நாட்களாக நோய்தொற்று பரவல் தொடர்வதால் மக்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் 'Pandemic Fatigue' எனும் தொற்று சோர்வுடன் உள்ளனர்.
இதுபோன்ற மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் மக்கள் தங்களின் உடல் நலம் மட்டுமின்றி மனநலம் மீதும் அதிக அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, நோய்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் மக்கள் மத்தியில் மிகுந்த பயம் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து விடுபட நோய்தொற்று குறித்த செய்திகளை அதிகம் பார்ப்பதை தவிர்த்து பிற செய்திகள் பார்க்க ஆர்வம் காட்ட வேண்டும். பகிரப்படும் செய்திகளின் நம்பகத்தன்மையை முதலில் ஆராய வேண்டும். அவை உண்மையா என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக நம்ப கூடாது. நம்பகத்தன்மையை தெரியாமல் மற்றவர்களுக்கு பகிரவும் கூடாது.
நோய்தொற்று தடுப்பூசி குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். தடுப்பூசி குறித்து மக்களுக்கு எந்த சந்தேகம் இருப்பினும் அதை மருத்துவரிடம் சென்று கேட்டு தடுப்பூசி குறித்த தங்களின் சந்தேகங்களுக்கு விளக்கத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி மிகவும் அவசியமானது. அதுவே கொடிய வைரஸை எதிர்த்துப் போராட நமக்கு கிடைத்துள்ள ஆயுதமாகும். தடுப்பூசி போட்டுக்கொள்வதுடன் முகக்கவசம் அணிதல் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் அடிக்கடி கைகளை கழுவுதல் என்பது உள்ளிட்ட சுகாதாரத்துறை அளித்துள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் சரிவரப் பின்பற்ற வேண்டும். தற்போது மக்கள் அனைவரும் மிகவும் பீதியுடன் உள்ளனர். இதைப் போக்க அரசு நோய்த்தொற்று பரவலைக் கட்டுபடுத்தவும் சிகிச்சை அளிக்கவும் மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து தொடர்ந்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வர வேண்டும். இதனால் மக்கள் மத்தியில் தற்போது உள்ள பயம் நீங்கும்.
எனக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு விடுமோ என்று பயந்து வாழ்வதைத் தவிர்த்து, அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். நோய்த்தொற்று பாதிப்பு ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக் கொண்டால், அந்தப் பாதிப்பில் இருந்து எளிதில் மீண்டு வந்து விடலாம்.
பயந்து பயந்து ஒன்றும் ஆகப்போவதில்லை. எனவே, திட்டமிடல் என்பது மிக அவசியம். உதாரணமாக, நோய்த்தொற்று பரவல் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்றால், குறிப்பாக அவசர உதவி எண்கள் தெரிந்து கொள்ளுதல் அருகில் உள்ள மருத்துவமனை மற்றும் மருத்துவர்களின் விவரம், தாங்கள் சிகிச்சைக்கு சென்றால் தங்களின் குழந்தைகளை பாதுகாப்பான இடத்தில் விட்டுச் செல்ல ஏற்ற இடம் என்பது உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தங்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம்.