பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட மூன்று சாலைகளின் விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க கூடுதல் அதிகாரிகளை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட மூன்று சாலைகளின் விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க கூடுதல் அதிகாரிகளை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி நகரப் பகுதியில் சாலைகளின் இருபுறமும் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சாலை விரிவாக்கப் பணிகள் ரூ.30 கோடி செலவில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இதற்காக நடைபாதை மேடை மற்றும் சாக்கடை கால்வாய்கள் கட்டும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில், மத்திய பேருந்து நிலையம், மற்றும் சார் ஆட்சியர் அலுவலகம் அருகே சாலைகளை அகலபடுத்தும் பணிகளுக்காக ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டு குவிக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். ஏற்கெனவே வாகன நெரிசல் அதிகமுள்ள பகுதி இது. தற்போது, சாலைப் பணிகளுக்காக கொட்டப்பட்டுள்ள ஜல்லிக் கற்களாலும் சாலைப் பணிகள் நடைபெறுவதாலும் போக்குவரத்து நெரிசல் இன்னும் அதிகமாக உள்ளது.
எனவே, இதுபோன்ற பகுதிகளில் சாலைப் பணிகளை அதிகாரிகள் இரவு நேரங்களில் மேற்கொண்டால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது. அன்றாட பணிகளும் பாதிக்காது. அதோடு, பகல் நேரங்களில் இப்பகுதியில் கூடுதல் அதிகாரிகளை நியமித்து போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.