கோவை: கோவை-திருச்சி சாலை மேம்பால பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கோவை: கோவை-திருச்சி சாலை மேம்பால பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கோவை திருச்சி சாலையில் ரெயின்போ பகுதியில் துவங்கி பங்கு சந்தை வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.250 கோடி செலவில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2019ம் ஆண்டு தொடங்கியது. இந்த மேம்பாலம் 4 வழிப்பாதையாக 17.20 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படுகிறது. இதில் சுங்கம் பகுதியில் மட்டும் மேம்பாலத்தின் அகலம் 19.60 மீட்டராக உள்ளது.
மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் கொரோனா முழு ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டது. அதன்பின்னர் விரைவாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மேம்பாலத்தின் 80 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன. மேம்பாலத்தின் இருபுறமும் இறங்கு தளம் அமைக்கும் பணி, சுங்கம் பகுதியில் 19.60 மீட்டர் அகலத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணியும் தற்போது நடந்து வருகிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோவை- திருச்சி சாலையில் சிங்காநல்லூரில் இருந்து வரும் வாகனங்கள் உக்கடம் வழியாக பொள்ளாச்சி, கேரளா செல்ல வசதியாக சுங்கம்-உக்கடம் சாலையில் 400 மீட்டர் தூரத்திற்கு இறங்கு தளம் அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்து விட்டது. 2 வாகனங்கள் செல்லும் வகையில் 8.50 அகலத்தில் இந்த இறங்குதளம் அமைக்கப்படுகிறது. இந்த பணி முடிந்ததும் மேம்பாலத்தின் கீழே சர்வீஸ் சாலைகள் அமைக்கும் பணி நடைபெறும்.மேம்பால பணிகள் அனைத்தும் இன்னும் 3 மாதத்தில் முடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்,” என்று கூறினர்.