கோவை: தேர்தல் ஆணையம் பெருந்தொற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளாதது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி?
கோவை: கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலகம் எங்கும் பரவிய கொரோனா பெரும் தொற்று இயல்பு வாழ்க்கையை பாதித்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். பின்னர், நோய்களின் வீரியம் படிப்படியாக குறைந்து இந்த வருடம் ஜனவரி மாதம் மிகவும் குறைந்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனால் பொதுமக்கள் மீண்டும் தங்கள் பணிகளில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஈடுபட முடிந்தது.
அதைத்தொடர்ந்து, மார்ச் மாதம் தேர்தல் பரப்புரைகள் தொடங்கப்பட்ட நிலையில், பெரிதாக எந்த கட்டுப்பாட்டு விதிகளும் பின்பற்றப்படாமல் விடப்பட்டதால் மீண்டும் கொரோனா நோய்தொற்று அதிகரித்துள்ளது. நோய் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் துரிதமாக செயல்பட வேண்டும்.
கொரோனா நோய் தொற்றுக்கான முறையான பரிசோதனைகளை செய்து நோய்த்தொற்றை உறுதிப்படுத்துவதை தவிர்த்து, அதன் முக்கிய அறிகுறிகளான சளி, உடல் வலி போன்றவற்றை வைத்து மட்டுமே அது கொரோனா தான் என்று அவர்களை தனிமைப்படுத்துவது முற்றிலும் தவறான அணுகுமுறையாகும்.
இப்போது மீண்டும் நோய்தொற்று அதிகரித்துள்ள நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது மேலும் தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது பெரிய பொருளாதார சுமையை உருவாக்கும். அதை தாங்கிக் கொள்ளும் அளவிற்கு யாரும் தயாராக இல்லை. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
மேலும், மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் நிறைய பரிசோதனை முகாம்களை அமைத்து பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி விநியோகம் குறைவாக உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இது தொடர்பாகவும் அரசு விரைவாக செயல்பட வேண்டும்.
உடனடியாக டாஸ்மாக்கை மூட வேண்டும்
கோயில்கள், பொது நிகழ்ச்சிகள், உட்பட பல கட்டுப்பாடுகளை விதித்து உள்ள தமிழக அரசு டாஸ்மாக்குக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்காதது ஏன்? டாஸ்மாக்கிற்கு கட்டுப்பாடு விதிக்காமல் அரசு எடுக்கும் நடவடிக்கைகள் உண்மையான நோய் கட்டுப்பாடு நடவடிக்கைகளாக இருக்க வாய்ப்பில்லை.
அரசு இலவசமாக முகக் கவசங்கள் வழங்க வேண்டும்
மேலும் நோய் கட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு அரசே இலவசமாக மக்களுக்கு முகங்களை வழங்க வேண்டும் அதேபோல் பொது இடங்களில் கிருமி நாசினிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அரசு வைக்கவேண்டும்.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விட்டுவிட்டு அபராதம் விதிக்கும் முறை தவறானது. மேலும், காவல்துறையினர் அத்துமீறி பொதுமக்களை தாக்கி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது முறையற்ற செயல் ஆகும்.
தேர்தல் ஆணையம் பெருந்தொற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளாதது ஏன்?
பெருந்தோட்ட காலத்தில் மக்களை நலத்தை கருத்தில் கொள்ளாமல் தேர்தலை அறிவித்ததே தவறு.மேலும், ஜனவரி மாதத்தில் மிகவும் கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த நோய்த்தொற்றை குறைந்தது 6 மாத காலங்களில் முற்றிலுமாக ஒழித்து விட்டு அதன்பின் தேர்தலை நடத்தி இருக்கலாம் ஆனால் தேர்தல் ஆணையம் அவர்கள் கடமையை மட்டும் செய்து முடிக்க விளைந்ததால் இன்று மறுபடியும் நோய் தொற்று அதிகரித்துள்ளது. அரசு தனது கடமையிலிருந்து தவறியதாகவே நான் கருதுகின்றேன்.
அரசின் இந்த நடவடிக்கையால் அதிகரித்துள்ள பெருந்துறை கட்டுக்குள் கொண்டு வர இன்று நாம் மிகவும் சிரமப்படுகிறோம். இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டி விரைந்து செயல்படாவிட்டால் நோய் தொற்றின் காரணமாக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு அவர் பேசினார்.