கோவை: கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக சலூன் கடைகளுக்கு வருவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால், சிகை அலங்கார தொழிலில் ஈடுபடுவோர் கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர்.
கோவை: கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக சலூன் கடைகளுக்கு வருவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால், சிகை அலங்கார தொழிலில் ஈடுபடுவோர் கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர்.
கொரோனா நோய்த்தொற்று பரவல் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் ஒவ்வொன்றாக அமலுக்கு வருகின்றன.
அனைத்து துறைகளிலும் நோய்த்தொற்று பரவல் பாதிப்பு ஏற்படுத்தி உள்ள நிலையில், சிகை அலங்கார கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பெரும் அளவு குறைந்துள்ளது. இதனால்,கடை உரிமையாளர்கள் மற்றும் சிகையலங்கார நிபுணர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
இதுகுறித்து சிகை அலங்கார கடை உரிமையாளர் சிவா கூறியதாவது, "கொரோனா நோய் தொற்று பரவலுக்கு பின் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
சிகை அலங்கார கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை முற்றிலும் குறைந்து விட்டது. முன்பெல்லாம் கட்டிங் செய்வது மட்டுமின்றி சேவிங் உள்ளிட்ட இதர சர்வீஸ் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வருவார்கள். ஆனால் தற்பொழுது கட்டிங் செய்ய மட்டுமே பெரும்பாலானவர்கள் வருகின்றனர்.
இரண்டு வாரங்கள் மூன்று வாரங்களுக்கு ஒரு முறை என்ற நிலை மாறி ஒன்றரை மாதம் இரண்டு மாதம் கழித்தபின் மட்டுமே கட்டிங் செய்வதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். பெரும்பாலனவர்கள் வீட்டிலேயே சுயமாக சேவிங் செய்து கொள்கின்றனர்.
கட்டிங், சேவிங் சர்வீஸ் மட்டுமின்றி பேசியல், ப்ளீச், ஹேர் டை, தலைக்கு ஆயில் மசாஜ் என்பது உள்ளிட்ட இதர சர்வீஸ் வழங்கினால் மட்டுமே இன்றைய சூழலில் வாடகை, மின் கட்டணம், ஊழியர்களுக்கு சம்பளம் உள்ளிட்டவை கொடுத்தது போக சிறிதளவு லாபம் பார்க்க முடியும். ஆனால், பெரும்பாலானவர்கள் இதுபோன்ற சேவைகளை பெறுவதில் இப்போது ஆர்வம் காட்டுவதில்லை.
கடை முகப்பு தோற்றம், டிவி, ஏசி, சோபா, உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் வசதிக்கு தேவையான பல்வேறு உபகரணங்கள் என சலூன் கடைக்காரர்கள் அதிகளவு முதலீடு செய்துள்ளனர் ஆனால் தற்பொழுது தினமும் பெயரளவில் மட்டுமே வாடிக்கையாளர்கள் வந்து செல்வதால், பெரும்பாலான சிகை அலங்கார கடை உரிமையாளர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
பெரிய நிறுவனங்கள் சார்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிகை அலங்கார கடைகளில் உள்கட்டமைப்பு வசதி குளிர்சாதன வசதியுடன் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தற்பொழுது அரசு வழிகாட்டுதலின்படி ஏசி பயன்படுத்த கூடாது என்பதால் கடைகளுக்குள் போதிய காற்றோட்ட வசதி ஏற்படுத்த முடியவில்லை. இதனால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் பலர் திரும்பி சென்று விடும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதால் நாளுக்கு நாள் நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது. பொதுவாக ஞாயிறு அன்று சலூன் கடைகளில் கூட்டம் நிரம்பி வழியும் ஆனால் தற்போது வாடிக்கையாளர்கள் ஞாயிற்றுக்கிழமை கூட அதிகம் பேர் வருவதில்லை. சிகை அலங்கார தொழிலில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிக்கு அரசு உதவ வேண்டும். இதுவே எங்கள் எதிர்பார்ப்பு.” இவ்வாறு அவர் கூறினார்.