கோவை: கோவையில் அத்துமீறி உணவு விடுதியில் நுழைந்து பொதுமக்களை தாக்கிய காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடை உரிமையாளர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
கோவை: கோவையில் அத்துமீறி உணவு விடுதியில் நுழைந்து பொதுமக்களை தாக்கிய காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடை உரிமையாளர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
"காவல்துறையின் அத்துமீறல் சாத்தாங்குளம் சம்பவத்தை ஒத்தது"
கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வரும் நிலையில், நேற்று இரவு கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் உணவு விடுதி அரசு வரையறுத்துள்ள நேரத்திற்கு பின்பும் செயல்பட்டதாக கூறி உள்ளே நுழைந்த காவல்துறை உதவி ஆய்வாளர் முத்து அங்கு உணவு அருந்திக் கொண்டிருந்த பொது மக்களையும், கடையில் பணிபுரியும் ஊழியர்களையும் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவையில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் காவல்துறையினர் கடைகளை மூடக்கோரி கூறியதாகவும், பின்னர், கடை உரிமையாளர் அரை கதவு மூடப்பட்ட நிலையில் வைத்திருந்த போது, ஓசூரைச் சேர்ந்த பயணிகள் தெரிந்திருக்க நேரமாகிவிட்டதால் உணவு ஏதேனும் இருந்தால் வழங்குமாறு கேட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு உணவு வழங்கி இருக்கிறார்கள்.
அதனைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் உணவு அருந்திக் கொண்டிருக்கும்போது சுமார் 10.20 மணியளவில் கடையினுள் நுழைந்த காவல் உதவி ஆய்வாளர் முத்து கையில் இருந்த லத்தியால் அவர்களை தாக்கியுள்ளார், கடையில் பணிபுரியும் அவர்களையும் தாக்கி உணவருந்திக் கொண்டு இருந்தவர்களை வெளியே செல்ல உத்தரவிட்டுள்ளார். அப்போது அவர் தாக்கியதில் கடை ஊழியர் ஒருவருக்கு கண்ணருகே காயம் ஏற்பட்டுள்ளது. அதற்கான சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
மக்களைத் தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் முத்து பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, உணவு விடுதியின் உரிமையாளர் மோகன்ராஜ், தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரி பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளது மட்டும் போதுமான நடவடிக்கை அல்ல, அத்துமீறி தங்களை தாக்கிய காவல்துறை அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இரவு 11 மணிவரை கடைகள் செயல்படலாம் என்ற அரசனை இருக்கும் போது அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி செயல்படுபவர்கள் மீது இத்தகைய கொடூர தாக்குதல் நடத்தியிருப்பது தூத்துக்குடி மாவட்டம் சாத்தாங்குளம் சம்பவத்தை ஒத்தது என கூறி இத்தகைய செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து பொதுமக்களையும் வியாபாரிகளையும் பாதுகாக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.