கோவை: அமைதியான தமிழகத்துக்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கோவை வணிகர்களிடம் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை: அமைதியான தமிழகத்துக்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கோவை வணிகர்களிடம் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவையில் சமீபத்தில் பாஜகவின் தேர்தல் பரப்புரையில் பங்கேற்க உபி முதலமைச்சர் யோகி ஆதித்யா நாத் வந்தபோது, பாஜகவினர் கடைகளை அடைக்கச் சொல்லியும், கற்களை கடைகள் மீது வீசி, கோஷங்களை எழுப்பியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில், கோவையில் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சம்பவம் நடைபெற்ற அதே நாள், மக்கள் நீதி மையத்தின் தலைவர் மற்றும் தெற்கு தொகுதி வேட்பாளர், கமல்ஹாசன் நேரில் சென்று பாதிக்கபட்ட கடை உரிமையாளரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி இன்று கோவை பெரிய கடை வீதியில் உள்ள வியாபார பெருமக்களையும், வியாபாரிகள் சங்க நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
தமிழகத்தை பொறுத்தவரை எந்தவிதமான ஜாதி, மத, பிரச்சனைகளுக்கும் அதிமுக ஆட்சியில் ஒரு துளியும் இடமளிக்க மாட்டோம், என வணிகர்களிடம் உறுதி தெரிவித்துள்ளார். குறிப்பாக, கோவை மாவட்டத்தை பொறுத்தவரை அனைவரும் சகோதரத்துவத்துடன் பாதுகாப்பாக வாழ்வதற்கு அதிமுக என்றும் உறுதுணையாக இருக்கும் என்று வணிகர்களிடம் கூறியுள்ளார்.
மேலும், எந்தச் சூழ்நிலையிலும் எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் கோவை மாவட்டத்தில் ஒரு போதும் நடைபெற அனுமதிக்க மாட்டோம். அமைதியான கோவைக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.