திருப்பூர்: திமுக-காங்கிரஸ் கலாச்சாரமே பெண்களை அவமானப்படுத்துவதுதான் என தாராபுரத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.
திருப்பூர்: திமுக-காங்கிரஸ் கலாச்சாரமே பெண்களை அவமானப்படுத்துவதுதான் என தாராபுரத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டணி கட்சியான அதிமுக சார்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கினைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்றனர். த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தாராபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் உட்பட தேசிய ஜனநாயக கூட்டணியின் 13 வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு, பிரதமர் நரேந்திர மோடி பரப்புரை கொண்டார்.
தாராபுரம் வளர்ச்சி பெறும்
பொதுக்கூட்டத்தில் தாராபுரம் தொகுதி பாஜக வேட்பாளரும், அந்த கட்சியின் மாநில தலைவருமான எல்.முருகன் பேசும்போது, “பிரதமர் மோடி வருகையில் இருந்தே, தாராபுரம் எந்த அளவிற்கு வளர்ச்சி அடையும் என்பதை நாம் காணலாம்” என்று கூறினார்.
உண்மையான கதாநாயகன் மோடி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது;
“இந்தியாவை இருளுக்குள் தள்ளியது காங்கிரஸ் கட்சி. திமுக காங்கிரஸ் கூட்டணி இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.
மருத்துவகல்லூரிக்கு காங்கிரஸ் ஆட்சியில் அனுமதி வாங்கவே படாதபாடுபடுவோம். ஆனால் இப்போது ஒரு வருடத்தில் தமிழகத்தில் 14 மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மோடி அனுமதி கொடுத்துள்ளார்.
என்னை எல்லாரும் ஜல்லிக்கட்டு நாயகன் என அழைக்கிறார்கள். காங்கிரஸ்-திமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை விதிக்கப்பட்டது. மெரினாவில் 15 லட்சம் பேர் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டு போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோது மோடி அவர்களை சந்தித்தேன். உடனடியாக அரசாணை வெளியிட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது மோடிதான். அவர்தான் உண்மையான கதாநாயகன்.” இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.
தமிழகத்துக்கு அள்ளிக்கொடுத்த பிரதமர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
“நம் கூட்டணி வலிமையான கூட்டணி, வெற்றி கூட்டணி. பிரதமர் 1 நிமிடம் கூட வீணாக்காமல் இந்தியா முன்னேற, இரவு பகல் பாராமல் உழைக்கின்றார். இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்ற நாட்டு மக்களின் கனவை நனவாக்கி வருகின்றார்.
தமிழகம் கேட்கும் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்து வருகிறது. ரூ165 ஆயிரம் கோடி கொடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறையை வளர்ச்சி அடைய வைத்துள்ளார். திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றால் மத்திய-மாநில அரசுகள் இணக்கமாக இருக்க வேண்டும். பிரதமர் மனது வைக்க வேண்டும்.
முதலீட்டாளர்கள் மாநாட்டில் 304 தொழிற்சாலைகள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தால் , வறட்சியாக உள்ள இந்த பகுதிகள் எல்லாம் பசுமையாக மாறப்போகின்றன.” இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
பிரதமருக்கு வேல் பரிசளிப்பு

தேர்தல்பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் நரேந்திரமோடிக்கு வேல் பரிசளிக்கப்பட்டது. “வெற்றிவேல் வீரவேல்” என தமிழில் உரைய துவங்கிய பிரதமர் மோடி பேசியதாவது;
“திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை, காளிங்கராயன் உள்ளிட்ட மிகச்சிறந்த மனிதர்களை கொடுத்த மண் தமிழ்நாடு. ஜநா சபையில் நான் உரையாற்றிய போது சில தமிழ் சொற்களை பயன்படுத்தினேன்.

இன்னும் சில நாட்களில் நாம் புதிய சட்டமன்ற உறுபினர்களைத் தேர்வு செய்ய இருக்கிறோம். தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பம் சேவை செய்ய வாய்ப்பு கேட்டு உங்கள் முன்னால் நிற்கிறது.
ரயில்வே கோட்டங்கள் இணைப்பு குறித்த கோரிக்கையை நிச்சயம் மத்திய அரசு பரிசீலிக்கும். தமிழ் மொழி கலாச்சாரத்தை காக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க, உங்கள் வாக்குகள் பயன்பெறும்.
திமுக-காங்கிரஸ் கூட்டணி குடும்ப வாரிசு அரசியலை முன்வைத்துள்ளது. திமுக-காங்கிரஸ் கட்சியினர் புதிய ஏவுகனையை ஏவுகின்றனர். 2 ஜி ஏவுகணை என்பது தமிழகத்தின் பெண்களை அவமானப்படுத்த ஏவப்பட்ட ஏவுகனை. இப்படி பேசுபவர்களை திமுக- காங்கிரஸ் கட்சியினர் கட்டுப்படுத்த வேண்டும்.
திமுகவினர் முதல்வரின் தாய் குறித்து அவதூறாக பேசியுள்ளனர். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் மற்ற பெண்களையும் அவமானப்படுத்துவார்கள். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம் என்பதே பெண்களை அவமானப்படுத்துவது தான்.

திண்டுக்கல் ஐ.லியோனியும் பெண்கள் குறித்து அருவெருக்கதக்க வகையில் பேசினார். திமுகவின் இளவரசரும் நடுநாயகமாக இருந்து கொண்டு பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசிய போதும், திமுக அதைத் தடுக்கவில்லை. 1989-ல் மார்ச் 25ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா மீது நடத்திய தாக்குதலை யாரும் மறக்கவில்லை.
திமுகவின் உள்ளூர் தலைவர்கள் அமைதிக்கு எதிரானவர்கள். மேற்கு வங்கத்தில் கூட, இவர்களின் நட்பு கட்சியான திரிணாமூல் காங்கிர்ஸ் கட்சிக்கும் பெண்களை மதிக்க தெரியாது. இவர்களின் கூட்டணி, நட்பு என்பது எப்போதும் பெண்களுக்கு எதிராகவே உள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்து அங்கத்தினரும், ஆண்டாள் மற்றும் அவ்வையாரின் புரட்சிகரமான வரிகளைப் பின்பற்றுகிறோம். கட்டப்பட்ட புதிய கழிப்பிடங்கள், புதிய எரிவாயு இணைப்புத்திட்டம், புதிய வீடுகள் கட்டும் திட்டம் போன்றவை பெண்களுக்கு உதவியாக இருந்துள்ளன. பெண்களின் வளர்ச்சியை இது மேலும் ஊக்கப்படுத்தும்.
கொங்கு பகுதியில் உள்ள மக்கள், தொழிலைத் தொடங்கவும் வளர்க்கவும் உத்வேகமாக உள்ளனர். அவர்களின் வியாபார நேர்த்தியை நாட்டின் மக்கள் அறிவார்கள். கொங்கு பகுதி மக்கள் அதிக கருணை மிக்கவர்கள். அரசும், தனிப்பட்ட முறையில் நானும் கொங்கு பகுதியின் வணிக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம்.
எளிதாகத் தொழில் நடத்தக்கூடிய, தொடங்கக் கூடிய நாம் எவ்வாறு உயர்ந்துள்ளோம் என அனைவருக்கும் தெரியும். ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் திட்டம் இந்த பகுதியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
தமிழகத்தில் உருவாக்கப்பட்ட ராணுவத் தளவாடத்தை எல்லைப்பகுதியான வடகிழக்கு பகுதிக்கு சமீபத்தில் நான் அர்ப்பணித்தேன்.
திமுக-காங்கிரஸ் ஆட்சியின் ஊழல் கண்கள், தொழில் வளர்ச்சியை உருவாக்காது. கடந்த காலங்களில் செய்தது போலவே உள்ளூர் ஆட்கள் தொழில் நடத்துபவர்களிடம் பணத்தைப் பறிப்பார்கள். திமுக ஆட்சியின் போது மின்சாரத் துண்டிப்பு போன்றவைகள் தொழிலை மேம்படுத்தாது.
விவசாய துறை நவீனத்தையும், சீர் திருத்தத்தையும் நோக்கி உள்ளது. விவசாய துறை நீர்பற்றாக்குறையை சந்தித்தே வந்துள்ளது. பாசன முறையை மாற்றுவதற்கான பயிற்சிகளையும் வழங்கி வருகிறோம்.
அனைவரும் பா.ஜ.க வின் தேர்தல் அறிக்கையை முழுமையாகப் படிக்க வேண்டும். உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தேவையானதும் அதில் உள்ளது.” இவ்வாறு பிரதமர் நரேந்திரமோடி பேசினார்.