பொள்ளாச்சி; முதல்வர் பிறப்பு குறித்து அவதூறாகப் பேசிய திமுக எம்.பி., ஆ.ராசாவை கண்டித்து பொள்ளாச்சியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி; முதல்வர் பிறப்பு குறித்து அவதூறாகப் பேசிய திமுக எம்.பி., ஆ.ராசாவை கண்டித்து பொள்ளாச்சியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறப்பு குறித்து கொச்சைப்படுத்தும் வகையில் அவதூறாகப் பேசினார். அவரது பேச்சு பல தரப்பினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. கண்ணியமாக பேச வேண்டும் எனறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே அறிவுறுத்தினார்.
ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவினர் தமிழகத்தில் ஆங்காங்கே தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று பொள்ளாச்சி நகர அதிமுக சார்பில் நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் திருவள்ளுவர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், முதல்வரின் தாயாரை இழிவுபடுத்திப் பேசிய ராசாவை கண்டித்தும் அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஆ. ராசாவின் பேச்சு ஒட்டு மொத்த தாய்மார்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இது போன்ற பேச்சுகளைத் தொடர்ந்து பேசினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஆர்ப்பாட்டத்தின்போது அதிமுக வினர் எச்சரித்தனர்.