நான் வெற்றி பெற்றால் தொழில் வளர்ச்சிக்கு உதவி செய்வேன்: கோவையில், அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் தனித்தனியாக வாக்குறுதி!

கோவை: நான் வெற்றி பெற்றால் தொழில் வளர்ச்சிக்கு உதவி செய்வேன் என்று கோவை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தனித்தனியாக வாக்குறுதி அளித்துள்ளனர்.



கோவை: நான் வெற்றி பெற்றால் தொழில் வளர்ச்சிக்கு உதவி செய்வேன் என்று கோவை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தனித்தனியாக வாக்குறுதி அளித்துள்ளனர்.



இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை சார்பில் வேட்பாளரை தெரிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று மாலை அவிநாசி ரோட்டில் உள்ள சேம்பர் டவர்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை தலைவர் பாலசுப்பிரமணியன் அனைத்து வேட்பாளர்களையும் வரவேற்று சேம்பர் சார்பில் கௌரவப் படுத்தினார். தொழில்துறையினர் மத்தியில் வேட்பாளர்கள் பேசியவற்றின் தொகுப்பை இங்கே பார்ப்போம். 

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் பேசியதாவது:-







தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை நகரின் வளர்ச்சிக்கு அ.தி.மு.க. அரசு கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. 5 ஆண்டுகளில் 50 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை தந்துள்ளோம். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் உப்பிலிபாளையம் முதல் நீலம்பூர் வரையிலான உயர்மட்ட மேம்பாலம், கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 

கோவை நகரின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில்கொண்டு கோவை சர்வதேச விமான நிலைய நில ஆர்ஜித பணிகளை துரிதப்படுத்தி உள்ளோம். தற்போது 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. தவிர கோவை நகரில் தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில் ஐடி ஹப் நிறுவப்படும். தவிர சென்னைக்கு அடுத்து கோவையில்தான் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின்கீழ் மேலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்ட காரணத்தால் மட்டுமே சிறப்பான வளர்ச்சியை கொடுக்க முடிந்தது. இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். 



இதுதவிர 24 மணி நேரமும் தடையில்லா தண்ணீர் விநியோகம், மேற்கு புறவழிச்சாலை திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டது. இவை எல்லாவற்றுக்கும் மேல் நான் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய கோவை தெற்கு பகுதியில் கடந்த 40 ஆண்டு காலமாக பட்டா கேட்டு போராடி வந்த 600-க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு பட்டா வாங்கித் தந்துள்ளேன். இதுதவிர அரசு பெண்கள் கலைக் கல்லூரி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்று என் தொகுதி மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் கடந்த 5 ஆண்டுகளில் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் தேர்தலில் எனக்கு வாய்ப்பு அளிக்கும்பட்சத்தில் தொழில்துறை வளர்ச்சிக்குத் தேவையான உதவிகள் செய்வதுடன், கோவை வடக்கு தொகுதியை ஒரு முன்மாதிரி தொகுதியாக மாற்ற அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்வேன் என்று கூறிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் துரை என்ற சேலஞ்சர் துரை பேசியதாவது:-







அ.தி.மு.க. கட்சியில் நான் எம்.எல்.ஏ.வாக பணியாற்றியபோது பல்வேறு வளர்ச்சிப் பணிகளை எனது தொகுதியில் செய்துள்ளேன். குறிப்பாக கோவை அரசு மருத்துவமனை கட்டமைப்பு மேம்படுத்துவதில் அதிக அக்கறை காட்டியது உடன் பிணவறை அருகே உள்நோயாளிகள் பிரிவு செயல்படக் கூடாது என்பதை கருத்தில்கொண்டு உள்நோயாளிகள் பிரிவை வேறு இடத்துக்கு மாற்றியதுடன் பிணவறை மற்றும் பிரேத பரிசோதனை வளாகத்தை மிகவும் சிறந்த உள்கட்டமைப்பு வசதியுடன் உருவாக்கியுள்ளேன். 

இதுதவிர காந்திபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேம்பால திட்டப் பணிக்கு தடை ஏற்பட்டபோது அங்குள்ள வணிகர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காந்திபுரத்தில் மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டேன். நான் தேர்தலில் வெற்றி பெற்றால் கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணி உள்ளிட்ட தொழில்துறை வளர்ச்சிக்கு மற்றும் மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்வேன். இவ்வாறு அவர் பேசினார்.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் பேசியதாவது:-







நான் போட்டியிடும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன என்று வாக்காளர்கள் தெரிவிக்கின்றனர். நான் வெற்றி பெற்றால் உடனடியாக பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். இதுதவிர சாலை படுமோசமாக உள்ளது குறித்தும் நான் செல்லும் இடமெல்லாம் புகார்கள் வருகின்றன. தொகுதி முழுவதும் தரமான சாலைகள் அமைப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவேன். நகரில் வழிப்பறி கொள்ளைச் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. அவற்றைத் தடுக்க மூன்றாவது கண் என்று சொல்லக்கூடிய சி.சி.டி.வி. கேமராக்கள் மிகவும் உதவுகின்றன. எனவே தொகுதி முழுவதும் அதிக எண்ணிக்கையில் சி.சி.டி.வி. கேமராக்களை நிறுவ நடவடிக்கை மேற்கொள்வேன். 

இந்த தொகுதியில் நகை தயாரிப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அந்தத் துறைக்கு என சிறப்பு பூங்கா ஒன்று நிறுவ நடவடிக்கை மேற்கொள்வேன். தவிர நெசவாளர்கள் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை மேற்கொள்வேன். கோவை அரசு கலைக் கல்லூரியை பொறுத்தவரை மிகவும் பழமையான பாரம்பரியம் மிக்க புகழ் கொண்டது. அந்தல் கல்லூரி வளாகத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை சிறப்பாக மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். நகரம் முழுவதும் பசுமையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி மரக்கன்றுகள் அதிக அளவில் நடப்படுவதை உறுதி செய்வேன். குறிப்பாக அனைத்து சமுதாய மக்களிடம் சமூக நல்லிணக்கம் ஏற்பட தேவையான நடவடிக்கை மேற்கொள்வேன். இவ்வாறு அவர் பேசினார், 

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் நா. கார்த்திக் பேசியதாவது:-







கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி மட்டுமல்ல கோவை நகரின் அனைத்துப் பகுதிகளிலும் மேம்பாலங்கள், ரயில்வே உயர்மட்ட மேம்பாலங்கள், டைடல் பார்க், பல்லடத்தில் ஜவுளி பூங்கா, இஎஸ்ஐ மருத்துவமனை சர்வதேச தர அந்தஸ்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டது, மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டன. நான் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால் குடிநீர் வழங்கும் உரிமையை சூயஸ் நிறுவனத்துக்கு கொடுத்துள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்வேன். 



இதுதவிர விமான நிலைய விரிவாக்க திட்டப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு அந்தத் திட்டம் செயல்பட நடவடிக்கை எடுப்பேன். இவை எல்லாவற்றுக்கும் மேல் எனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பத்தாண்டுகளுக்கு மேல் நிறைவடையாமல் உள்ள ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன். தொழில் துறை வல்லுனர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தி அவர்களது கருத்துக்களை கேட்பேன். இவ்வாறு அவர் பேசினார். 

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யக் கட்சி வேட்பாளர் டாக்டர் மகேந்திரன் பேசியதாவது:-







மதச்சார்பற்ற சமூக நல்லிணக்கம் கொண்ட வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் பிரதிநிதியாக நான் இருப்பேன். ஜி.எஸ்.டி. போன்ற திட்டங்களை யாரும் எதிர்ப்பதில்லை. அந்த திட்டத்தில் இருக்கக்கூடிய பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அதை அமல்படுத்திய அரசின் கடமை. இதை அவர்களது கவனத்துக்கு கொண்டு சென்று தொழில்துறை உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் அந்தச் சட்டத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் மூலம் தமிழகம் சார்பில் தெரிவித்து நடவடிக்கை எடுக்க உதவுவேன். 

வேளாண்துறை வளர்ச்சியே மிக முக்கியம். மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி மூலம் வேளாண் துறையில் சிறப்பான வளர்ச்சி பெற முடியும். இதற்கு உதவும் வகையில் உணவு பதப்படுத்துதல் பூங்காவை நிறுவ நடவடிக்கை எடுப்பேன். கோவை போன்ற ஒரு பெரிய மாநகரில் ஒரேயொரு அரசு மருத்துவமனை செயல்படுவது ஏற்புடையது அல்ல. 

மக்களின் நலனை கருத்தில் கொண்டு மேலும் ஒரு அரசு மருத்துவமனை சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் நான் போட்டியிடும் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிகள் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். மிகவும் பழமைவாய்ந்த சிங்காநல்லூர் ஏரி 288 ஏக்கரில் அமைந்துள்ளது அதில் மீன்பிடிக்க தடை விதிக்கப் பட்டுள்ளபோதும் தினமும் தடையை மீறி டன் கணக்கில் மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இது மிகவும் தவறான செயல். இதை உடனடியாக தடை செய்து அந்த ஏரியை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்வேன். இவ்வாறு அவர் பேசினார்

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வானதி சீனிவாசன் பேசியதாவது:-







எனக்கு கோவை மாவட்டம். கடந்த இரண்டு முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பின்பும் எனது கணவரும் நானும் பணியாற்றும் வக்கீல் தொழிலை சென்னையில் தொடர்ந்திருக்கலாம். ஆனால் என்னை நம்பி எனக்கு வாக்களித்த கோவை மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினருக்கு அலுவலகம் உள்ளதைப்போல நானே ஒரு அலுவலகத்தை அமைத்து மக்கள் சேவை மையம் என்று பெயரிட்டு நான் போட்டியிட்ட பகுதியில் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய உதவி செய்து வந்தேன்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் மகளிர் சுய உதவிக்குழு மற்றும் பலதரப்பு ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் கடன் உதவித் திட்டங்களை மத்திய அரசின் திட்டங்கள் மூலம் பெற்றுத்தர நடவடிக்கை எடுத்தேன். தவிர ஜி.எஸ்.டி. திட்டத்தில் பதிவு செய்வது மிகவும் சிரமமாக உள்ளதாக மக்கள் என்னிடம் கூறியதால் இலவசமாக நூற்றுக்கணக்கான மக்களுக்கு ஜி.எஸ்.டி. திட்டத்தின் கீழ் பதிவு செய்ய எனது மையம் சார்பில் உதவி செய்தோம். 

இதுதவிர நோய்த்தொற்று பரவல் காலத்தில் ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு மோடி சமையலறை என்ற பெயரில் உணவு தயாரித்து வழங்கி வந்தோம். வேலைவாய்ப்பின்மை மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளதை கருத்தில் கொண்டு கோவை இந்துஸ்தான் கல்லூரியில் வேலைவாய்ப்பு திருவிழா நடத்தப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு ஒரே நாளில் வேலைவாய்ப்பு ஆணை பெற்றுத் தந்தேன். கோவை நகர வளர்ச்சியை கருத்தில் கொண்டு ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனம் அமைக்க நடவடிக்கை எடுத்தேன்.



கோவை தொழில் துறையினரின் தேவைகளை கேட்டதுடன் மட்டுமன்றி மத்திய அரசுக்கும், தொழில் துறையினருக்கும் இடையே ஒரு பாலமாக கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறேன் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். நான் வெற்றி பெற்றால் கோவை தொழில் வளர்ச்சிக்கு மட்டுமல்ல கோவை நகரின் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு உதவியுடன் செயல்படுத்த அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...