கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் மற்றும் சூலூர் சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் மற்றும் சூலூர் சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் கிணத்துக்கடவு பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசிய மு க ஸ்டாலின், சுண்ணாம்பு பினாயில் வரை ஊழல் செய்திருக்கிறார் அமைச்சர் வேலுமணி, இதுவரை 12 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளாட்சித் துறையில் ஊழல் செய்திருக்கிறார் என்று வரிசையாகப் பட்டியலிட்டார்.
குறிப்பாக 2 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் செய்திருக்கிறார் அமைச்சர் வேலுமணி என்று விருதுநகர் அதிமுக எம்.எல்.ஏ ராஜவர்மன் பேட்டி கொடுத்திருப்பதாக, ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொரு தொகுதியின் வேட்பாளரையும் வரிசையாக அறிமுகம் செய்தார் ஸ்டாலின். அப்போது, தொண்டாமுத்தூர் என்றவுடன், கைதட்டலும் விசில் சத்தமும் விண்ணைப் பிளக்கும் அளவுக்கு இருந்ததைப் பார்க்க முடிந்தது. தொண்டாமுத்தூர் தொகுதியின் வேட்பாளர் 'காங்கேயம் காளை' கார்த்திகேய சிவசேனாபதி என்று தான் அறிமுகம் செய்தார், ஸ்டாலின்.
அடுத்த ஆட்சி நிச்சயமாக திமுக தான். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எஸ்.பி. வேலுமணிக்கு உதவுகிற காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் ஸ்டாலின். 'திருந்தனும் இல்லனா விடமாட்டேன்' என்று காட்டமாக கூறினார்.மேலும், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் திமுக ஆட்சிக்கு வந்ததும் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் என அவர் உறுதி அளித்தார்.
கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அத்திக்கடவு அவினாசி திட்டம் விரைந்து நிறைவேற்றப்படும், இந்திய வார்ப்பட நிறுவனம் கோவையில் துவங்கப்படும், நவீன புதிய புறநகரை உருவாக்கி, கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும், போக்குவரத்தை குறைக்கும் விதமாக பறக்கும் ரயில் திட்டம் நிறைவேற்றப்படும், என்று தெரிவித்தார்.
கொரோனா பேரிடர் நிதி உதவி பற்றி பேசிய ஸ்டாலின், தயவு செய்து மாஸ்க் போடுங்க என்று பிரச்சாரத்திற்கு வந்த மக்களிடம் கோரிக்கை விடுத்தார். மே 2 ஆம் தேதி, திமுக வெற்றி பெற்ற பிறகு, ஜூன் மூன்றாம் தேதி கலைஞரின் பிறந்தநாளன்று அறிவித்தபடி கொரோனா நிதி உதவியாக 4,000 ரூபாய் கொடுக்கப்படும், என்று அறிவித்தார்.

இந்தி திணிப்பு, மத வெறியைத் தூண்டும் சத்திகள், ஒருபோதும் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்றும். இது "திராவிட மண்" எவனும் நெருங்க முடியாது. மோடி மஸ்தான் வேலை எல்லாம் இங்கு பலிக்காது. இந்தத் தேர்தல் தமிழகத்தின் சுயமரியாதையை காப்பாற்றும் தேர்தல், என்று ஸ்டாலின் கூறினார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக போராடிய போது, அதற்கு ஆதரவாக மாநிலங்களவையில் பாஜகவிற்கு பயந்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகன் வாக்களித்த நிலையில், இப்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நீக்கி விடுவோம் என பொய்யான வாக்குறுதி அளித்து இருப்பதாக ஸ்டாலின் பேசினார்.
திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை பிரதி எடுத்து அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீட்டு உள்ளதாக பேசிய ஸ்டாலின், கலைஞர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரை நீட் நுழைவுத் தேர்வை தமிழகத்தில் வர அனுமதிக்கவில்லை. தற்போது, தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா ஜனாதிபதியிடம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது, என சுட்டிக்காட்டினார்.
மேலும், பெண்கள் முன்னேற்றத்திற்காக அரசு வேலைவாய்ப்பில் 30 சதவீதமாக உள்ள இட ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும், கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுவினர் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், என்ற திமுக தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.