கோவை: கோவை அருகே அவுட் காய் வைத்து பன்றியைக் கொன்ற 2 பேர் கைது; வனத்துறை நடவடிக்கை
கோவை: கோவை அருகே காட்டுப் பன்றியை வேட்டையாடுவதற்காக அவுட்டுக்காயை பதித்து வைத்து, பன்றிகளை கொன்ற இரண்டு நபர்கள் மீது வனத்துறையினர், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து காவல் துறையினர் தெரிவிக்கையில், சிறுமுகை வனச்சரக அலுவலருக்கு கிடைத்த தகவலின்படி, வனவர் மற்றும் வனப் பணியாளர்கள் அடங்கிய குழு, பெத்திக்குட்டை சுற்றுக்கு உட்பட்ட அன்னூர் தாலுக்கா, அம்மாசெட்டி புதூர் பகுதியில் ரோந்து மேற்கொண்டனர்.
அப்போது, ஜேம்ஸ் என்ற ராமசாமி (வயது 38), என்பவர் வீட்டிற்கு சென்று பார்த்த போது, இறந்த காட்டுப்பன்றியை தீயில் சுட்டு இரண்டாக வெட்டி சமைப்பதற்கு சுத்தம் செய்த வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த காளியப்பன் (வயது 50) என்பவருடன் சேர்ந்து அவுட்டுக்காய் (நாட்டு வெடிகுண்டு) வைத்து காட்டுப் பன்றியை கொன்றது தெரியவந்தது.
பின்பு, அவுட்டுக்காய் வைத்த இடமான பட்டக்காரன்புதூர் சுடுகாடு பகுதிக்கு சென்று சம்பவ இடத்தை சோதனை செய்ததில் வெடித்த அவுட்டுக்காயின் பாகங்கள் கிடைத்துள்ளது. இதன் மூலம், காட்டுப்பன்றியை அவுட்டுக்காய் வைத்து கொன்றது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, வனத்துறையினர் இறந்த பன்றியின் உடலை, சிறுமுகை வனச்சரக அலுவலகம் கொண்டு வரப்பட்டு, கோவை வனக் கால்நடை மருத்துவர், சுகுமார் தலைமையில், உடல் பாகங்கள் ஆய்வு செய்யப்பட்டது. உடற்கூர் ஆய்வில், அவுட்டுக்காய் வைத்து காட்டுப் பன்றியை கொன்றது உறுதி செய்யப்பட்டதை அடுத்து,காவல் துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தபட்ட இருவரும், அன்னூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
அன்னூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் மூலம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.