கோவை: தி.மு.க.வையும் கலைஞரையும் எதிர்த்துதான் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க.வைத் தொடங்கினார். அதனால் தி.மு.க.தான் என்றும் பொது எதிரி என்று அமைச்சர் வேலுமணி கூறினார்.
கோவை: தி.மு.க.வையும் கலைஞரையும் எதிர்த்துதான் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க.வைத் தொடங்கினார். அதனால் தி.மு.க.தான் என்றும் பொது எதிரி என்று அமைச்சர் வேலுமணி கூறினார்.
கோவை பேரூர் செட்டிபாளையம் பகுதியில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் நடத்தி வைக்கப்படவுள்ள இலவசத் திருமணங்கள் நடக்கவிருக்கும் இடத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார்.
இதையடுத்து அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு 73 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைப்பதாக இருந்தது. அது 123 ஜோடிகளாக அதிகரித்துள்ளது. கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டு திருமணம் தள்ளிப்போனவர்களுக்கும் இலவசமாக திருமணம் செய்து வைப்பதால் எண்ணிக்கை இந்த வருடம் அதிகரித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செயல்படுத்தும் திட்டங்களுக்கு, தான் கூறித்தான் முதலமைச்சர் திட்டங்களை செயல்படுத்துவதாக மு.க.ஸ்டாலின் கூறிவருவது அரசியல் நாகரிகமற்ற செயலாகும்.
கட்சியைச் சேர்ந்த அனைவரும் அண்ணன் - தம்பி போல் செயல்பட வேண்டும் என்று நான் கூறியதை அனைவரும் தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டனர். வேட்பாளர் ஆகும் தகுதி பலருக்கு இருப்பினும் வாய்ப்பு ஒருவருக்கே வழங்க முடியும். மற்றவர்கள் ஒருங்கிணைந்து அந்த வேட்பாளரை வெற்றி பெறவைக்க பாடுபட வேண்டும் என்னும் அர்த்தத்தில்தான் நான் அப்படிக் கூறினேன்.
தி.மு.க.தான் பொது எதிரி என்று தினகரன் கூறியிருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி நடக்கும்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களை கூர்க்கில் தங்கவைத்து மு.க. ஸ்டாலினை குறுக்குவழியில் முதலமைச்சராக்க பாடுபட்டபோது தி.மு.க. பொது எதிரி என்று தெரியவில்லையா?
தி.மு.க.வையும் கலைஞரையும் எதிர்த்துதான் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க.வைத் தொடங்கினார். அதனால் தி.மு.க.தான் என்றும் பொது எதிரி. கருணாநிதி நினைத்திருந்தால் ஈழப்படுகொலையை தடுத்திருக்க முடியும். ஆனால் கருணாநிதி தமிழினத்துக்கு இழைத்த நம்பிக்கைத் துரோகத்தை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்.
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணாமல், தற்போது ஸ்டாலின் மக்களிடமிருந்து மனுக்கள் பெறுவதாக கண்துடைப்பு வேலை செய்து வருகிறார். முதலமைச்சரின் மக்கள் செல்வாக்கைக் கண்டு மு.க.ஸ்டாலின் பயத்தில் இவ்வாறு நடந்து கொள்கிறார். அ.தி.மு.க.வில் யாராலும் பிளவை ஏற்படுத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.