திராவிட கட்சிகள் பெண்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை - கோவையில் பாஜகவின் காயத்ரி ரகுராம்
கோவை: திராவிட கட்சிகள் பெண்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை எனவும், பெண்கள் முன்னேற்றத்திற்காக பா.ஜ.க பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளது, என பாஜக இலக்கிய கலாச்சார பிரிவு மாநில தலைவர் காயத்திரி ரகுராம் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் அரசூரில் பா.ஜ.க சார்பில் நேற்று நடத்தப்பட்ட பொங்கல் விழாவில், அக்கட்சியின் கலாச்சார பிரிவு மாநில தலைவர் காயத்திரிரகுராம் கலந்து கொண்டார். பின்னர், பேட்டியளித்த அவர், எந்த கட்சியும் செய்யாத அளவிற்கு, பாஜக சார்பில் பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த விழாக்களை கொண்டாடுவதன் மூலம், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் உயர்த்தி வருகின்றோம், என தெரிவித்தார்.
அனைத்து தமிழர்களும் சுதந்திரமான பொங்கலை கொண்டாடி வருகின்றனர், என தெரிவித்த அவர், மத்திய அரசின் வேளாண் மசோதா விவசாயிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்தார். பொங்கல் கொண்டாடுவது ஓட்டுக்காக அல்ல எனவும், பா.ஜ.க எப்போதும் பொங்கல் பண்டிகை கொண்டாடும் எனவும், ஆனால் நாங்கள் இப்போது அனைவரும் கவனிக்கும்படி கொண்டாடி வருகின்றோம், எனவும் தெரிவித்தார்.
திமுகவை பார்த்து மக்கள் வெறுத்து போய் இருக்கின்றனர் எனவும், அதனால் இந்த விழாவில் நிறைய பேர் கலந்து கொண்டுள்ளதாகவும், எல்லாரும் சேர்ந்து கொண்டாடும் போது இந்த விழா பெரிதாக கவனிக்கப்படுகின்றது, என்று கூறினார்.
துக்ளக் ஆசிரியர், குருமூர்த்தி சசிகலா குறித்து சர்ச்சையான பேச்சுக்கு பதிலளித்த அவர், அந்த விழாவில் தான்கலந்து கொள்ளவில்லை என கூறினார். யாராக இருந்தாலும், பெண்களை விமர்சிக்க கூடாது எனவும் தெரிவித்த அவர், துக்ளக் விழா குறித்து கேள்வி எழுப்பும் ஊடகங்கள் உதயநிதி குறித்து ஏன் கேள்வி எழுப்புவதில்லை என்று கேள்வி எழுப்பினார்.
பொதுவாக திராவிட கட்சிகள் பெண்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை எனவும், அம்மா ஜெயலலிதா இருந்த போது மரியாதை கொடுத்தார்கள், இப்போது யாரும் கொடுப்பதில்லை, என்றார். பெண்கள் முன்னேற்றத்திற்கு பா.ஜ.க பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளது என, காயத்திரி ரகுராம் தெரிவித்தார்.