கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை பறிக்கும் பணியின்போது பெண் தொழிலாளியை காட்டுயானை மிதித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை பறிக்கும் பணியின்போது பெண் தொழிலாளியை காட்டுயானை மிதித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை நகரை ஒட்டி உள்ளது நல்ல காத்து எஸ்டேட். இந்த எஸ்டேட்டில் தொழிலாளியாக பணியாற்றி வருபவர் ஜெயமணி (54). இவர் இன்று காலை தேயிலை காடு எண் 44ல் சக தொழிலாளர்களுடன், தேயிலை கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அருகில் இருந்த வனப்பகுதியில் இருந்து திடீரென ஒரு காட்டு யானை வெளியே வந்து ஜெய மணியின் பின்புறம் தாக்கியுள்ளது. சம்பவ இடத்திலேயே, கீழே விழுந்த ஜெயமணியை அந்த காட்டு யானை மிதித்துக் கொன்றது.
இதை நேரில் பார்த்த அருகில் இருந்த மற்ற தொழிலாளர்கள் சத்தம் போட்டபடி அங்கிருந்து ஓடி உயிர் பிழைத்தனர். பின்னர், எஸ்டேட் நிர்வாகத்தினர் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து அங்கு முகாமிட்டிருந்த காட்டு யானைகளை விரட்டி விட்டு, ஜெயமணியின் உடலை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பகல் நேரத்தில், கொழுந்து பறிக்கும் பணியின்போது, காட்டு யானை ஒரு பெண் தொழிலாளியை மிதித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வரும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு துரத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பட்டப் பகலில், யானை மிதித்து, பெண் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.