கோவை: சவாலான கடந்த ஆண்டு கழிந்து பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சியான ஆண்டாக அமைய கோவை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
கோவை: சவாலான கடந்த ஆண்டு கழிந்து பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சியான ஆண்டாக அமைய கோவை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக கோவை மாவட்டக் காவல் துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சவாலான 2020-ஆம் ஆண்டு முடிந்து 2021-ஆம் ஆண்டு பிறக்கும் வேளையில் பொதுமக்கள் அனைவருக்கும் கோவை மாவட்டக் காவல்துறை சார்பாக ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். காவல்துறைக்கு கடந்த ஓராண்டு மிகுந்த சவாலான காலகட்டம். கண்ணுக்கு தெரியும் எதிரி மற்றும் குற்றவாளிகளிடமிருந்து பொதுமக்களின் உயிர் உடைமைகளை பாதுகாக்கும் பணியுடன் கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமியோடு நடத்திய போர் மிகுந்த சவாலானது.
இந்த ஆண்டு பதிவான மொத்தம் 41 கொலை வழக்குகளில் 38 கொலை வழக்கு தொடர்பாக எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கோவை மாவட்டத்தில் ஆதாயக்கொலை, கூட்டுக்கொள்ளை, வழிப்பறி, கன்னக்களவு, திருட்டு ஆகிய குற்றங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 400 வழக்குகளில் 307 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டது. களவாடப்பட்ட சொத்தின் மதிப்பு ரூபாய் 3,77,50,125. இதில் ரூபாய் 3,19,65,540 மதிப்பிலான 85 சதவீத சொத்துக்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி செய்யப்பட்ட பகல் மற்றும் இரவு ரோந்தின் காரணமாக கடந்த 2019-ம் ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 185 குற்ற வழக்குகள் குறைந்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆணடைக் காட்டிலும் இந்த வருடம் 4 சதவீதக்கும் அதிகமான குற்ற வழக்குகள் துப்புதுலக்கப்பட்டுள்ளது. இதில் இந்த ஆண்டு 7 சதவீதம் அதிகமான களவு போன பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நீதிமன்ற விசாரணையில் இருந்த 7 கொலை வழக்குகளில் 5 வழக்குகள் தொடர்பாக ஆயுள் தண்டனையும், இரண்டு வழக்குகளில் 7 ஆண்டு சிறைத்தண்டனையும் ஒரு ஆதாயக் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையும் நீதிமன்றம் மூலம் உறுதிசெய்யப்பட்டது. கூட்டுக்கொள்ளை வழக்கில் 10 ஆண்டு சிறைத்தண்டனை நீதிமன்றம் மூலம் உறுதிசெய்யப்பட்டது. இந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு குற்றங்கள் பதிவாகி எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் 63 ஆக பதிவாகியுள்ளது.
அனைத்து வழக்குகளிலும் எதிரிகள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் 121 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்ற போக்சோ வழக்குகளில் 5 வழக்கில் எதிரிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஒரு வழக்கில் 7 வருட சிறைத்தண்டனையும் வேறொரு வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது. வேறொரு வழக்கில் எதிரிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றுத்தரப்பட்டது. குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் சம்பந்தமாக மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு 10 போக்சோ வழக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளன.
போதை பொருட்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 120 வழக்குகள், லாட்டரி தொடர்பாக 252 வழக்குகள், சூதாட்டம் தொடர்பாக 382 வழக்குகள் , மணல் திருட்டு தொடர்பாக 14 வழக்குகள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா போன்ற பொருட்களை விற்றது தொடர்பாக 499 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு வாகனத்தை பாதுகாப்பாக இயக்குவது பற்றி மொத்தம் 3263 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக மோட்டார் வாகன விபத்து வழக்குகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1814-ல் இருந்து 1724 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சாலை விபத்தில் 456 பேர் மரணமடைந்துள்ளனர். இந்த ஆண்டு 371 ஆக குறைந்துள்ளது. இந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் 3,57,194 மோட்டார் வாகன சட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவற்றில் குடிபோதையில் வண்டி ஓட்டுதல், அபாயகரமாக வாகனங்களை ஓட்டுதல் போன்றவை உள்பட 3,265 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்றியதால் காவல்துறையில் 179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் கோவை மாவட்ட ஆயுதப்படையைச் சேர்ந்த தங்க இசக்கி கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். மற்ற அனைவரும் பூரண நலம் பெற்றனர். இந்த கோவிட் 19 தடை உத்தரவு காலங்களில் தடையை மீறியவர்கள் மீது மொத்தம் 23,080 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 28,200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 20,300 வாகனங்கள் பறிமுதல் செய்து அனைத்து வாகனங்களும் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் அபராதத்தொகையாக மொத்தம் 33,00,350 வசூலிக்கப்பட்டது. தற்போது முகக் கவசம் அணியாதவர்கள் மற்றும் அரசு விதிகளை மீறுவோர்மீது நடவடிக்கை எடுத்து 15,49,000 அபராதம் வசூலிக்கப்பட்டது. இரண்டு முறை கோவிட் 19 தொற்று சம்பந்தமாக இணைய வழி ஓவியப்போட்டி நடத்தி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக மூன்றாம் கண் எனப்படும் சி.சி.டி.வி. காமராக்கள் இந்த ஆண்டு 2399 புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த ஆண்டு அதிகப்படியான குற்ற வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கோவை மாவட்டத்தில் 2019-ஆம் வருடத்தைக்காட்டிலும் அதிக குற்றச் சம்பவங்களை கண்டுபிடிக்க பேருதவியாக அமைந்தது. கடந்த 3 மாதங்களாக மனுதாரரின் வீட்டிற்கு சென்று விசாரணை செய்தும் 15 சிறப்பு முகாம்களை நடத்தி மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. தேசிய குறை தீர்ப்பு நாளான 12.12.2020 அன்று 1056 வழக்குகள் நீதிமன்றத்தில் முடிக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் 22-ஆம் தேதி தொலைந்து போனவர்களைக் கண்டுபிடிக்க சிறப்பு முகாம் நடத்தியும் , இந்த மாதம் 25.12.2020 வரை காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடிக்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. தொலைந்து போனவர்கள் மற்றும் அடையாளம் தெரியாமல் இறந்தவர்களை அடையாளம் கண்டுபிடித்தும் அக்குடும்பத்தாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. காணாமல் போன இளம்சிறார்கள் சிறப்பு முகாம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டனர்.
எதிர்வரும் புத்தாண்டு வாகன விபத்து இல்லாத, குற்றம் இல்லா , அமைதியான, மகிழ்ச்சியான புத்தாண்டாக அனைவருக்கும் அமைய கோவை மாவட்டக் காவல் துறையின் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.