Exclusive: இயற்கை எழில் கொஞ்சும் கேர்மாளம் பகுதி மலைவாழ் மக்கள்: செல்போன் டவர் வசதியில்லாததால் பரிதவிப்பு!

கோவை: இயற்கை எழில் கொஞ்சும் கேர்மாளம் பகுதியில் செல்போன் டவர் வசதியில்லாததால் இப்பகுதி மலைவாழ் மக்கள் அவசர உதவி பெறவும், அத்தியாவசிய தேவைகளைப் பெறவும் முடியாமல் பரிதவிக்கின்றனர்.

கோவை: இயற்கை எழில் கொஞ்சும் கேர்மாளம் பகுதியில் செல்போன் டவர் வசதியில்லாததால் இப்பகுதி மலைவாழ் மக்கள் அவசர உதவி பெறவும், அத்தியாவசிய தேவைகளைப் பெறவும் முடியாமல் பரிதவிக்கின்றனர்.



தமிழகம் - கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் கொள்ளேகால் செல்லும் வழியில் அமைந்துள்ளது கேர்மாளம் கிராமம். ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டாரத்திற்குட்பட்ட கேர்மாளம் ஊராட்சி பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.



கேர்மாளம் அருகே பூதாளபுரம், தலூதி, வி எம் தொட்டி, குடியூர், குட்டை தொட்டி, ஜே.ஆர்.எஸ்.புரம், ஜோகிகவுண்டணூர், சிக்குனிசாபாளையம், ஒரத்தி, கானக்கரை ஆகிய கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொள்ளேகால் செல்லும் வழியில் அடர்ந்த வனப்பகுதியில் கேர்மாளம் உள்ளது. இதனால் எப்போதும் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் இப்பகுதி தட்பவெப்ப நிலை அமைந்திருக்கும்.



கேர்மாளம் பகுதி மக்களுக்கு விவசாயமே பிரதான தொழில். சோளம், கேழ்வரகு, சின்ன வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பீன்ஸ், மஞ்சள், போன்ற பயிர்கள் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகின்றன. இப்பகுதி மக்களுக்கு தமிழக - கர்நாடக மாநிலம் எல்லைப்பகுதியில் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள உடையார்பாளையம் பகுதிதான் மார்க்கெட். அங்கு சென்று தான் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வருகின்றனர். இல்லையென்றால் சுமார் 50 கிலோ மீட்டர் பயனம் செய்து சத்தியமங்கலம் வரவேண்டும்.



இதனிடையே இப்பகுதியில் செல்போன் டவர் வசதி முற்றிலும் இல்லாததால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து கேர்மாளம் செக்போஸ்ட் அருகே டீ ஸ்டால் வைத்துள்ள ஜடேரூத்ரசாமி கூறுகையில், "இங்கு செக்போஸ்ட் பகுதியில் மட்டுமே டவர் கிடைக்கும். அதுவும் ரோமிங் கார்நாடக மாநில டவர் தான். செக்போஸ்ட் அருகில் உள்ள வீடுகளுக்குக்கூட டவர் கிடைக்காது. விவசாயிகள் தங்களது பொருட்களை மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வார்கள். அதற்காக வாகனங்களை அழைக்கவேண்டும், விவரம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் செக்போஸ்ட் வரை வர வேண்டும். கேர்மாளம் பகுதிக்கு சத்தியமங்கலம், கோவையில் இருந்து பேருந்து வசதி உள்ளது. சொந்தங்கள் ஊருக்கு வருவதைக்கூட தெரிவிக்க டவர் வசதியில்லை. மிகவும் குறிப்பாக ஊரடங்கு காலங்களில் ஆன்லைன் வகுப்புகள் முற்றிலும் தடைப்பட்டிருந்தது. உடல் நிலை சரியில்லை என்றாலும் கூட ஆம்புலன்ஸுக்கு தெரிவிக்க முடியாத நிலையில் இப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்" என்றார்.



ரமேஷ் என்பவர் கூறுகையில், "டிராக்டர் மூலம் விவசாய நிலங்களை உழவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். அருகில் உள்ள கிராமங்களுக்கு இப்பணிக்குச் செல்லவேண்டுமென்றால் தகவல் தெரிவிக்க முடியாது. நேரில் சென்றால்தான் அன்றைய தினம் வேலை உள்ளதா என தெரியவரும். எங்கள் பகுதி மாணவ, மாணவிகள் பலர் ஈரோடு, கோவை என அங்குள்ள கல்லூரிகளில் படித்து வருகின்றனர். அவர்கள் அவசரத் தேவைக்கு போன் செய்ய வேண்டுமென்றால்கூட முடியாது. வனப்பகுதி என்பதால் மாலை ஆறு மணிக்கு மேல் வெளியே செல்வது சிரமம். யானை, புலி என வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம்" என்றார். இவற்றை கருத்தில்கொண்டு இப்பகுதியில் தனியார் அல்லது அரசு சார்பில் டவர் அமைத்து மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...