கோவை: வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை: வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாளை நடைபெறும் வேளாண் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள விமானம் மூலம் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று மாலை கோவை வந்தடைந்தார்.
இதனிடையே, விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக அவர் அரசு விருந்தினர் மாளிகைக்குச் செல்ல இருந்த நிலையில், வேளாண் சட்ட திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு கருப்பு கொடி காட்ட உள்ளதாக தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து, அவினாசி சாலை லட்சுமி மில்ஸ் சந்திப்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த நிலையில், இடைவெளியில் கருப்பு கொடி காட்ட முயன்ற நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 15 பேரையும் போலீசார் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தி கைது செய்தனர்.

மேலும், அவினாசி நோக்கிச் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு சிறிது நேரம் ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டது. மேலும், இப்பகுதியில் குடியரசு துணைத் தலைவருக்கு கருப்புக் கொடி காட்டவும், மறியலில் ஈடுபடவும் யாரேனும் பதுங்கி உள்ளனரா என சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.