கோவை: ஈமு கோழி வளர்ப்பு இரண்டரை கோடி மோசடி செய்து ஏமாற்றிய ஈரோட்டைச் சேர்ந்த 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1.20 கோடி அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை: ஈமு கோழி வளர்ப்பு இரண்டரை கோடி மோசடி செய்து ஏமாற்றிய ஈரோட்டைச் சேர்ந்த 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1.20 கோடி அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள பட்டக்காரன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மோகன சுந்தரம், கண்ணுசாமி. இவர்கள் 2 பேரும் அந்தப் பகுதியில் ஈமு பவுண்டரி என்ற நிறுவனம் நடத்தி வந்தனர். இந்நிறுவனத்தில் பண்ணைத் திட்டம், விஐபி திட்டம் என இரண்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
பண்ணை திட்டம் என்பது நாம் முதலில் ஒன்றரை லட்சம் இந்த நிறுவனத்தில் கட்டிவிட வேண்டும். அப்படி கட்டியவுடன் அவர்கள் நமக்கு பண்ணை அமைத்து தருவதோடு ஈமு கோழி குஞ்சுகளையும் அதற்குத் தேவையான தீவனங்களையும் தந்து விடுவார்கள். மேலும் மாதாமாதம் ஊக்கத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம், வருடத்திற்கு போனசாக ரூபாய் 10 ஆயிரம் தந்து விடுவதாக தெரிவித்துள்ளனர்.
வி.ஐ.பி திட்டம் என்பது நாம் பணம் மட்டும் கட்டினால் போதும் கோழிகளை வளர்ப்பதில் இருந்து எல்லாவற்றையும் தாங்களே பார்த்துக் கொள்வதாகவும் ஊக்கத்தொகை மற்றும் போனசை அவருக்கு தந்து விடுவதாகவும் தெரிவித்திருந்தனர். இதனை நம்பி பலர் அவரிடம் பணத்தைக் கட்டி உள்ளனர்.
ஆனால், அவர்களுக்கு பண்ணை ஈமு கோழி குஞ்சுகள் போன்றவை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து கேட்டபோது எந்த பதிலும் வரவில்லை. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர்கள் சம்பவம் குறித்து ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் இதுபோன்று 110 பேரிடம் இரண்டரை கோடி வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் மீது கோவை டான்பீட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவி மோசடிகளில் ஈடுபட்ட மோகன சுந்தரம், கண்ணுசாமி ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 1 கோடியே 20 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், அவர்கள் அபராத தொகை ரூபாய் ஒரு கோடியே 20 லட்சத்தை வாடிக்கையார்களுக்கு கொடுக்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவில்லை. எனவே, அவர்களை பிடிக்க பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.