கோவை: ஐ.பேக் நிறுவனம் சொல்வதைக் கேட்டு கனிமொழி பேசுகிறார் எனவும் கோவை மாவட்டத்தைப் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
கோவை: ஐ.பேக் நிறுவனம் சொல்வதைக் கேட்டு கனிமொழி பேசுகிறார் எனவும் கோவை மாவட்டத்தைப் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் நலத்திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்றது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் வேலுமணி பேசுகையில், கோவையில் பிரச்சார பயணம் மேற்கொண்ட கனிமொழி கோவை குறித்து எதுவும் தெரியாமல் திமுகவின் ஆலோசனை நிறுவனமான ஐ பேக் சொல்வதைக் கேட்டும் யாரோ எழுதி கொடுத்ததை பேசுகின்றார் எனவும் கோவை மாவட்டத்தில் அதிகமான பாலங்கள் கட்டப்பட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.
தற்போது நடைபெறும் பால பணிகளால் மக்கள் இடையூறு இல்லாமல் செல்ல எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் கோவை தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் இன்று முதலமைச்சர் டைடல் பார்க் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி உள்ளார் எனவும் இதனால் 20 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் 40 மறைமுகமாக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார்.
அதேபோல, ஐ.டி கம்பெனிகளுக்கு வாடகைக்கு விடும் வகையில் இந்த டைடல் பார்க் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் 114.16 கோடி மதிப்பில் 2 ஏக்கர் பரப்பளவில் இது அமைக்கப்படுகின்றது என தெரிவித்த அவர், எங்களுக்கு பதவிகள் முக்கியமல்ல, மக்களுக்கு தேவையான திட்டங்களை கொடுக்க வேண்டும் என்பதே எங்களது முக்கிய நோக்கம் எனவும் தேர்தல் நேரத்தில் மட்டுமே திமுகவினர் வந்து பேசுவார்கள் என்று தெரிவித்தார்.
மேலும், கோவை மாவட்டத்தில் 5 அரசு கல்லூரிகள் இந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் அரசு மருத்துவமனை நவீன தரத்திற்கு மேம்படுத்தப்பட்டு உள்ளது என்றார்.
பின்னர், திமுகவினர் கோவைக்கு என்ன செய்தார்கள் ? என கேள்வி எழுப்பிய அவர், ஆதாரமில்லாத ஊழல் குற்றச்சாட்டுகளை திமுகவினர் சொல்லி வருவதாகவும் மெட்ரோ ரயில் உட்பட பல திட்டங்களுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டதாகவும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு குளங்கள் மேம்படுத்தபட்டள்ளது என தெரிவித்தார்.
விளம்பரத்திற்காக கனிமொழி தவறான தகவல்கள் சொல்லி வருவதாகவும் உள்ளாட்சித் துறையில் இருந்த போது மு.க.ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை என கூறியவர், பதவிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு செய்ய வேண்டியதை நாங்கள் செய்வோம் என்றார்.
அதேபோல, நொய்யலை மேம்படுத்த இந்த அரசு நிதி ஒதுக்கி இருக்கின்றது எனவும் நீர் நிலைகள் அளவு எங்கேயும் குறைக்க வில்லை. அதிகப்படுத்தப்பட்டு இருக்கின்றது என்றவர், நீர்நிலைகளில் இருந்த 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் அகற்றப்பட்டு நீர் நிலைகள் அகலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் நீர்நிலைகளின் அருகில் இருந்தவர்களுக்கு மாற்று வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், கொங்கு மண்டலம் எப்போதும் அதிமுகவின் கோட்டை எனவும் டெல்டா, சென்னை, திருவள்ளூர், மதுரை, வடமாவட்டங்கள் என அனைத்து இடங்களிலும் முதலமைச்சருக்கு ஆதரவு பெருகி உள்ளது எனவும் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவார் எனவும் அவர் தெரிவித்தார்.