கோவை: கோவையில் திமுக சார்பில் நடத்தப்படும் தெருமுனைக்கூட்டம், ஆர்ப்பாட்டம் போன்ற அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் கோவை மாநகர காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்படுவதாக, நா.கார்த்திக் எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் திமுக சார்பில் நடத்தப்படும் தெருமுனைக்கூட்டம், ஆர்ப்பாட்டம் போன்ற அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் கோவை மாநகர காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்படுவதாக நா.கார்த்திக் எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம் எல் ஏ, கோவை மாநகர காவல் துறைக்கு விடுத்துள்ள கண்டன பதிவில் தெரிவித்திருப்பதாவது:
கோவையில் கடந்த 4.5 ஆண்டுகளாக மக்களின் உரிமைகளைப் பெறுவதற்காகவும், பாதுகாப்பதற்காகவும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில், அரசியல் சாசன சட்டத்திற்குட்பட்டு , ஜனநாயக முறைப்படி, அறவழியில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், தெருமுனை கூட்டங்கள், வரவேற்பு நிகழ்ச்சிகள் போன்றவை நடத்த, உரிய முறைப்படி, அனுமதி கோரினாலும் கோவை மாநகர காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்படுகிறது.
மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் போராட்டம் நடத்த அரசினால் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்புறம் கூட ஆர்ப்பாட்டம் நடத்த மாநகர காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்படுகிறது.
ஆனால், கோவையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், முகம் சுளிக்கும் வகையிலும் மேடை அமைத்து, ஒலிபெருக்கிகள் அமைத்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி அதிமுகவினர் நடத்தும் ஆர்ப்பாட்டம், தெருமுனைக் கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டும், மாநகர காவல்துறை பாதுகாப்புடன் நடத்தப்படுகிறது.
திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடத்த சுவரொட்டி ஒட்டுவதற்கு கூட கோவை மாநகர காவல்துறை தடுக்க வருகிறது. ஆனால், ஆளுங்கட்சி சார்பில் வன்முறையை தூண்டும் வகையிலும், அநாகரீகமான முறையிலும், சுவரொட்டி ஒட்டப்படுகிறது. அதற்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்கிறது.
திமுகவுக்கு அனுமதி மறுக்கப்படும் நிலையில், அதிமுகவினருக்கு மட்டும் அனுமதி வழங்குவதற்கு காரணம் என்ன? அதிமுகவினரின் ஏவல் துறையாக காவல்துறை மாறிவிட்டதா..? எதிர்க்கட்சிக்கு அனுமதி மறுப்பு! ஆளுங்கட்சிக்கு அனுமதி என்ற பாரபட்சம் ஏன்?
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் உள்ள நிலையில், ‘“விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” எனும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிக்காக கழக மாநில மகளிரணி செயலாளர், மு.க.கனிமொழி எம்.பி அவர்கள் நாளை (10.12.2020) வருகை தர உள்ளார்.
அவருக்கு, நாளை மாலை 2.30 மணி – ஒண்டிப்புதூர் மேம்பாலம் அருகில் மாபெரும் வரவேற்பும், அதைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு கடந்த பத்து வருடங்களாக முடிக்கப்படாமல் இருக்கும், எச்.ஐ.எச்.எஸ் காலனி ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் பார்வையிடுகிறார். மாலை 5.30 மணி – வார்டு 75 , நஞ்சுண்டாபுரம், மேற்குபுதூர், நொய்யல் ஆறு பகுதிகளை பார்வையிடுகிறார். மாலை 6.15 மணி – வார்டு 38, பீளமேடு , பயனியர் மில் சாலை பகுதியில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் குடியிருப்பு வளாகத்தில் மக்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் மாலை 7.15 மணி – கோவை, பந்தயசாலை பகுதியில் உள்ள CSI ALL SOULS’ சர்ச்சில், “மக்கள் மன்றம்“ கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
மேற்கண்ட நிகழ்ச்சிகள் நடைபெறாமல் தடுப்பதற்கு, காவல் துறையைச் சார்ந்தவர்கள் மேற்கண்ட பகுதிகளில், அச்சுறுத்தும் வகையில் உளவுப்பிரிவை வைத்து ஈடுபடுகிறார்கள். செயலற்றுக் கிடக்கும் அதிமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டால் அடிப்படைத் தேவைகளைக்கூடப் பெற முடியாமல் அல்லல்படும் மக்களின் நலன் காக்க, அவர்களின் குரல் அரசுக்கு கேட்பதை தடுக்க நினைக்கும் இது போன்ற சர்வாதிகார முயற்சிகளைக் கைவிட வேண்டும்.
திமுக நிகழ்ச்சிகள், போராட்டங்களை தடுக்க, ஒடுக்க நினைக்கும் இது போன்ற அடக்குமுறை முயற்சியை, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். இதே நிலை தொடர்ந்தால் விரைவில், திமுக சார்பில், கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என எச்சரிப்பதாக, குறிப்பிட்டுள்ளார்.