கோவை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரதமர் மோடியின் கொடும்பாவியை தீவைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரதமர் மோடியின் கொடும்பாவியை தீவைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இரண்டு இடங்களில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்காக கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுல்தான் பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அவர்கள் கலந்து கொண்டார். 300க்கும் மேற்பட்டோர் பல்லடம் கொச்சின் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலில் ஈடுபட்டவர்கள் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.
இந்த மறியலில் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன் அவர்களுடன் விவசாயிகள் சங்கத் தலைவர் சு.பழனிசாமி, சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மறியல் போராட்டத்தால் பல்லடம், கொச்சின் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்தனர்.
அதேபோல, பாப்பம்பட்டி பிரிவில் நடைபெற்ற போராட்டத்தில் சிஐடியு மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, கண்ணம்பாளையம் முன்னாள் பேரூராட்சி தலைவர் முனுசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் பிரதமர் மோடி அவர்களின் உருவ பொம்மையை எரித்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன் அவர்கள், வேளாண் சட்டங்களை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கைக்கு அரசானது செவிசாய்க்க வேண்டும் என்றார்.
மேலும், தமிழக அரசு வேளாண் மசோதாக்களை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார். அதேபோல் சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய பகுதியில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.