கோவை: கோவையில் திமுக துணை பொதுச் செயலாளர் மற்றும் நீலகிரி பாராளுமன்ற எம் பி, ஆ ராசாவின் உருவப்படத்தைச் செருப்பால் அடித்தும், தீயிட்டுக் கொளுத்தியும், விஸ்வகர்மா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவையில் திமுக துணை பொதுச் செயலாளர் மற்றும் நீலகிரி பாராளுமன்ற எம் பி, ஆ ராசாவின் உருவப்படத்தைச் செருப்பால் அடித்தும், தீயிட்டுக் கொளுத்தியும், விஸ்வகர்மா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடியலை நோக்கி என்ற பிரச்சாரத்தை துவக்கி உள்ளார். பிரச்சாரத்தின் போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து விமர்சனங்களை ஸ்டாலின் முன் வைப்பதும், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல்வர் விமர்சனம் செய்வது என்று சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுகவின் துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்தும் தமிழக முதல்வர், எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார். "திமுகாவை ஊழல் கட்சி என கூறும் முதலமைச்சர், என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா..?" என கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில், நேற்று விருதுநகரில் செய்தியாளர் சந்திப்பில், அதிமுகவை சேர்ந்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திமுக குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து, விருதுநகரில் திமுகவினர் ராஜேந்திர பாலாஜியின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, அதிமுகவைத் தொடர்ந்து அவதூறாகப் பேசி வரும் திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவை கண்டித்து கோவை மாவட்ட விஸ்வகர்மா தங்க நகை தொழிலாளர்கள் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஊழல் கட்சி திமுக என ஸ்டாலினுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆன்ராசாவின் உருவப்படத்தைச் செருப்பால் அடித்தும், தீயிட்டுக் கொளுத்தியும், ஸ்டாலினின் உருவப் படத்தை கிழித்து எறிந்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட விஸ்வகர்மா அமைப்பினர், 2ஜி வழக்கில் 1.76 லட்சம் கோடி ரூபாய் மோசடி செய்த ஆ.ராசா அதிமுக குறித்து விமர்சனம் செய்ய தகுதியற்றவர் எனவும் தொடர்ந்து அதிமுக குறித்து அவதூறு பேசினால், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும், என்று எச்சரிக்கை விடுத்தனர்.
பின், அங்கு வந்த போலீசார், அவர்களிடம் இருந்து போஸ்டர்களை பறிமுதல் செய்ய முயன்றதால், இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கொரோனோ தொற்று காலத்தில் தொடர்ந்து திமுக- அதிமுக என இருகட்சியினரும் தனி மனித இடைவெளியை கடைபிடிக்காமல் நிகழ்வுகள் நடத்துவது கொரோனா பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது, என பொது மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.