கோவை: கோவை மாநகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் ஒரே நேரத்தில் மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற்றால் மக்கள் போக்குவரத்திற்கு எந்த சாலையில் செல்வார்கள்? பறந்தா செல்வார்கள்? என்று நா.கார்த்திக் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை: கோவை மாநகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் ஒரே நேரத்தில் மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற்றால் மிக மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும், எனவும் மக்கள் போக்குவரத்திற்கு எந்த சாலையில் செல்வார்கள் ? பறந்தா செல்வார்கள்? என்று நா.கார்த்திக் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்திலேயே மிகப்பெரிய நீளமான பாலம் ரூபாய் 1621 கோடி செலவில் கோவை அவிநாசி சாலையில் அமையவுள்ளது. இதற்கான, பூமி பூஜையை நேற்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி துவக்கி வைத்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசிய திமுக எம் எல் ஏ நா கார்த்திக், நாங்கள் மேம்பாலம் கட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் எந்த வித திட்டமிடுதலும் இல்லாமால், கோவையின் அனைத்து பிரதான சாலைகளிலும்,ஒரே நேரத்தில் பால கட்டுமான பணிகள் நடந்து வரும் வேளையில், மிக முக்கியமான அவிநாசி சாலையில் கட்டுமான பணிகளை தொடங்கினால் பெரிய அளவில் போக்குவரத்து மட்டும்.தொழில் பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இது குறித்துமேலும் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம் எல் ஏ, பேசுகையில், கோவை-அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் பகுதியில் இருந்து கோல்ட்வின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுமார் 1621 கோடி மதிப்பீட்டில், மேம்பாலம் அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டிலிருந்து இந்த மேம்பால கட்டுமானப் பணிகள் துவக்குவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், செயலற்று கிடந்த இந்த அதிமுக அரசு, தற்பொழுது இந்த ஆட்சியினுடைய ஆயுள் காலம் முடியும் தருவாயில், ஆதாயம் தேடுவதற்காகவும், கமிசன் பெறுவதற்காகவும், எந்த ஒரு தொலைநோக்கு பார்வையும் இல்லாமல், சரியான திட்டமிடலும் இல்லாமல், மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், இது போன்ற திட்டங்களை அவசர கதியில் தீட்டி மக்களை பெரிதும் சிரமப்படுத்துகின்றனர்.

ஏற்கனவே, கோவை மாநகரில் உள்ள முக்கியமான சாலைகளான திருச்சி சாலை, உக்கடம், மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலக் கட்டுமானப்பணிகள் அனைத்தும் மந்த கதியில், ஆமை வேகத்தில் நடந்து வருவதால், தொடர் போக்குவரத்து நெருக்கடி காரணமாக, வாகன ஓட்டிகள், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இதன்மூலம், சாலை விபத்து அடிக்கடி ஏற்படுகிறது. இந்தக் குறுகிய சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்ல முடியவில்லை. இதனால், காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிக வாகனங்கள் செல்லும்போது மணல், தூசு, புழுதி பறக்கிறது.
கோவை நகரில் உள்ள முக்கியமான அனைத்து சாலைகளிலும், ஒரே நேரத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றால் மிக மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். தொழில் வளர்ச்சியில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும்.
இந்த காரணங்களால், அனைத்து மேம்பாலப் பணிகளும் கட்டி முடிக்கப்பட்டு, அதன் பின் தான் அவினாசி சாலை மேம்பாலத்தை துவக்க வேண்டும். இந்த மேம்பாலங்கள் அடுத்த நூறாண்டுகளுக்கும் மக்களுக்கு பயன்பட வேண்டும். அப்படிப்பட்ட இந்த மேம்பாலங்களை அவசர கதியில் , சுய லாபத்திற்காக, எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல் செயல்படுத்தினால், அவசர கதியில் அமைக்கப்பட்ட காந்திபுரம் மேம்பாலம் போல மக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லாமல் போய் விடும்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் கையில் தான், இந்த நெடுஞ்சாலை துறை இருக்கின்றது. மேம்பால கட்டுமானப் பணிகள் தாமதத்தால், மக்கள் படும் மேற்கண்ட சிரமங்கள் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் நெடுஞ்சாலை துறை தூங்கி வழிந்து கொண்டு இருக்கிறது.
மேலும், பொதுமக்களின் அதிருப்தியும், கோபமும், ஆவேசமும் எல்லாத் திசையிலும் சூறாவளியாக எழுந்து கொண்டிருக்கிறது என்று எச்சரிக்கிறேன்.ஆகவே, ஏற்கனவே தொடங்கப்பட்டிருக்கும் அனைத்து மேம்பாலக் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்துவிட்டு, பின் அவினாசி சாலையில் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்தால் மக்களுக்கு பெரிய அளவில் போக்குவரத்தில் சிரமம் இருக்காது மற்றும் தொழில் வளர்ச்சியிலும் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது என்பதை பொதுமக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இல்லையென்றால் பொதுமக்களை திரட்டி கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் அறவழி போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.