கோவை: கோவையில் அதிவேகமாக பேருந்தை இயக்கி விபத்து ஏற்படுத்தியதில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் பலியான நிலையில், இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை: கோவையில் அதிவேகமாக பேருந்தை இயக்கி விபத்து ஏற்படுத்தியதில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் பலியான நிலையில், இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து மதுக்கரை வரை இயக்கப்படும் ஸ்ரீமுருகன் 3B வழிதட தனியார் பேருந்து இன்று உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது. வாகனத்தை ரமேஷ் என்ற ஓட்டுனர் இயக்கி உள்ளார்.
உக்கடம் மேம்பால பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், பேருந்தை ஓட்டுனர் அதிவேகமாக ஓட்டியுள்ளார். இதில் கட்டுபாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்று கொண்டு இருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதுடன், மேலும் ஒரு இரு சக்கர வாகனம் மற்றும் கார் மீது மோதிய பேருந்து அருகில் இருந்த பெட்ரோல் பங்கிற்குள் புகுந்து நின்றது.
இந்த விபத்தில் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த பொள்ளாச்சி முத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (72) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும், இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இருவரில் ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக ஓட்டுனர் மற்றும் நடத்துனரை கைது செய்துள்ள போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.