கோவை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து கோவையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து கோவையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் திருக்குவளையில் தடையை மீறி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை தடுத்து நிறுத்திய போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து கோவை மாவட்ட திமுகவினர் காந்திபுரம் நகர பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், கோட்டை அப்பாஸ், நாச்சிமுத்து ஆகியோர் தலைமையில் திமுகவினர் அங்கு திரண்டதை தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
திடீரென போலீசாரின் பாதுகாப்பை மீறிய திமுகவினர் சாலையின் நடுவே அமர்ந்து உதயநிதி ஸ்டாலின் கைது கண்டித்தும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்து கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து சரவணம்பட்டி சத்தியமங்கலம் சாலையில் மறியலில் ஈடுபட்ட மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா என்ற கிருஷ்ணன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.